எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்: திருமாவளவன் திட்டவட்டம்

சென்னை : தமிழகத்தில் நடைபெற உள்ள எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் முகநூலில் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: தேர்தலுக்கு முன் அதிமுக, தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என பலர் என்னிடம் கூறினர். ஆனால் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கு பங்கு உண்டு. அரசியலில் நேர்மை, தூய்மை இருக்க வேண்டும் என்பதனாலும், நம்மால் கூட்டணி சிதறிவிட்டது என இருக்கக்கூடாது என்பதாலும் கூட்டணியில் தொடர்ந்தோம்.

தேர்தலுக்கு பின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை, சிதறிவிட்டது. அதற்கான காரணங்களை கண்டறியாமல் நாம் கடைசி நேரத்தில் எடுத்த முடிவை அனைவரும் விமர்சிக்கின்றனர். நான் பதவிக்கு ஆசைப்படுகிறேன் என கூறுகின்றனர். பதவி ஆசை இருந்திருந்தால் பாஜ அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு கிடைத்த போது அதை பயன்படுத்தியிருக்க மாட்டேனா? இந்த தேர்தலில் நான் போட்டியிட ஆசைப்பட்டேன், அதனால் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட முடிவு எடுத்தேன்.

பின்னர் அது கூட்டணியை பலவீனப்படுத்தும் என கூறப்பட்டதால் பின் வாங்கினேன். ஆனால் ஆதவ் அர்ஜுனா கூட திருமாவளவன் தேர்தலுக்கு முன்பே கூட்டாக செயல்பட்டார் என அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இதோடு மட்டுமில்லாமல் திருமாவளவன் தடுமாறுகிறார் என தலைமையை பலவீனப்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுக்கின்றனர். விசிக இரண்டு தொகுதிகள் வெற்றி பெற்றிருந்தாலும் அது திமுக கூட்டணியின் வெற்றி தான்.

நான் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்று தவெகவில் இருந்து அழைப்பு வந்தது. திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றும் கூறினர். ஆனால் வன்னியரசுவின் வாய்ப்பு பறிக்கப்படும் என்ற காரணத்தினாலும், நான் உறுதியாக முடிவெடுத்ததாலும் அதை ஏற்கவில்லை. இப்போதும் திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியா என பேசுகின்றனர். நான் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். ஏற்கனவே இதை முதல்வர் விஜய்யிடம் தெளிவுபடுத்திவிட்டேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: