கட்சியில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு அதிமுகவை அழிக்கும் செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த 1988, 1989 ஆண்டுகளில் பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும் சந்தித்தார். 1996 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று சோதனையை சந்தித்தபோது, இழைக்கப்பட்ட துரோகங்களை துணிச்சலோடு எதிர்கொண்டு கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

நம் இரும்பெரும் தலைவர்களின் நல்லாசியோடும், உங்களின் ஒத்துழைப்போடும் ‘அதிமுக பொதுச் செயலாளர்’ பொறுப்பினை ஏற்று, இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் நான், பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும், துரோகங்களையும், கட்சி நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி தொண்டர்களின் துணையோடு எதிர்கொண்டு தொடர்ந்து பயணித்து வருகிறேன்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களை பெற்ற நிலையில், கழகத்தில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கட்சியை அழிப்பதற்கான செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நமக்கு எப்பொழுதும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா உறுதுணையாக இருக்கும்.
அதிமுகவிற்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனையை கண்டு கட்சி நிர்வாகிகள் மற் றும் தொண்டர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றி, தோல்வி என்பது மாறிமாறி வரும். அதிமுக தோல்வியை கண்டு துவண்டுவிடுவதுமில்லை.

அந்தவகையில், கட்சி தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இந்நிலையில் இருந்து விரைவிலேயே மீண்டு, எதிர்வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெறும். தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். இதற்கு நிர்வாகிகளும், கோடானு கோடி தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

‘எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’ என்ற ஜெயலலிதாவின் எண்ணவோட்டத்தை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மெய்ப்பித்துக் காட்டுவோம். அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தற்போதைய சூழ்நிலையை எண்ணி எவ்வித அச்சத்திற்கும், பதற்றத்திற்கும் ஆளாக வேண்டாம் என்று மீண்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: