கோடை விடுமுறை முடிந்து வரும் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு சீருடை, பேக், நோட்புக் கடைகளில் களைக்கட்டும் வியாபாரம்

*முன்னேற்பாடு பணிகளில் தீவிரம்

வேலூர் : கோடை விடுமுறை முடிந்து வரும் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் சீருடை, பேக், நேட்புக் வாங்க கடைகளில் வியாபாரம் களைக்கட்டி உள்ளது.தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டன.

கோடை விடுமுறை முடிந்து வரும் 4ம் தேதி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. அதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே செய்து முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள், உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுமட்டுமல்லாமல், புதிய வகுப்பறைகளில் பள்ளிப்படிப்பை ஆரம்பிக்கும் மாணவ- மாணவிகளுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கும் வகையில் சில பள்ளிகளில் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இன்னும் பள்ளிகள் திறக்க சில நாட்களே உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நோட்டு, பேக், பேனாக்கள் உள்ளிட்டவை வாங்க கடை வீதிகளில் அலைமோதினர். பள்ளி சீருடை வாங்கவும் துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள மொத்த கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. முக்கிய கடை விதிகளில் பெற்றொர்கள் சீருடைகள் எடுக்க சாரை சாரையாக வந்தனர். முக்கிய நகரங்களில் மாலை நேரத்தில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதனால், துணிக்கடைகளில் வியாபாரம் களைக்கட்டியது.

அதேபோல் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவ மாணவிகளும் பெற்றோர்களுடன் பல்வேறு மாவட்டங்களுக்கு கிளம்ப தொடங்கி உள்ளனர். இதனால் ரயில் மற்றும் பஸ்களில் முன்பதிவு செய்து திரும்புகின்றனர்.இதுகுறித்து துணிக் கடைகளின் உரிமையார்கள் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் மூன்று வகை வண்ணங்களில் இலவச சீருடைகள் வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச சீருடை வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்தாலும் கூட பள்ளி துவங்கும் நாளில், புதிய சீருடையுடன் செல்வதையே மாணவர்கள் விரும்புகின்றனர். அதற்காகவே, கடையில் துணி எடுத்து, சீருடை தைக்கின்றனர்.

மேலும் தனியார் பள்ளிகளில், அடிக்கடி சீருடைகளை மாற்றுகின்றனர். பள்ளி நிர்வாகமே, மொத்தமாக கொள்முதல் செய்து, தலா இரண்டு செட் சீருடையை தைத்தும் கொடுக்கின்றன. சில தனியார் பள்ளிகளின் சீருடைக்கான துணிகள், முன்னணி ஜவுளிக்கடைகளில் கிடைக்கிறது.

மே, ஜூன் மாதங்களில், சீருடை வியாபாரம் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒவ்வொரு கடைகளிலும், சீருடை துணி மற்றும் ஆடை விற்பனை, பெல்ட், ஷூ மற்றும் ஷாக்ஸ் விற்பனை களைகட்டியிருக்கிறது. ஸ்டேஷனரி கடைகளில் நோட்டு, புத்தகம், பென்சில் பாக்ஸ், ஜியாமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. மேலும் பேக், புத்தக விலைகள் சற்று விலை ஏற்றி உள்ளது.

ஆண்டு விற்பனை என்ற வகையில், ஸ்கூல் பேக் மற்றும் லஞ்ச் பேக் விற்பனை, ரோட்டோர கடைகளில் துவங்கி பிரபல கடை வரை, கூட்டம் களைகட்டியிருக்கிறது. பள்ளி மாணவ, மாணவியருக்கான சீருடை, காலணிகள், பெல்ட் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் விற்பனை, ஒவ்வொரு ஆண்டும் களைகட்டிக்கொண்டிருக்கும்.

மேல்நிலை பள்ளி படிப்பை முடித்து, உயர்கல்விக்கு பலரும் செல்கின்றனர். இதனால் சீருடை, காலணி போன்றவை புதிதாக வாங்கி கொடுக்க பெற்றோரும் விரும்புகின்றனர். இதனால் கடைகளில் வியாபாரம் களைக்கட்டுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: