கிணத்துக்கடவு அருகே பரபரப்பு கனிமவளம் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை பொது மக்கள் சிறை பிடிப்பு; பரபரப்பு

கிணத்துக்கடவு: ‘தினகரன்’ செய்தி எதிரொலியாக கிணத்துக்கடவு அருகே கனிமவளம் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை பொது மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகா, கிணத்துக்கடவு தாலுகா மற்றும் சின்னக்குயிலி, பெரிய குயிலி, தேகாணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது.

அதில், ஒரு சில கல்குவாரிகள், கனிம வளத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக கூறப்படு வரும் நிலையில், அந்த கல்குவாரிகளில் இருந்து, இரவு நேரத்தில் கிணத்துக்கடவு வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ‘தினகரன்’ நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நேற்றுக்காலை, கிணத்துக்கடவு ஒன்றியம், நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி, சங்கராயபுரம் புரம் அருகே, அளவுக்கு அதிகமாக கனிமவளங்களை ஏற்றிக்கொண்டு, விபத்து ஏற்பட்டதும் வகையில் வந்த 4 டிப்பர் லாரிகளை, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த, கிணத்துக்கடவு காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் கார்த்திக் தங்கம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவரிடம், அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டு வரும் கனிமவள வாகனங்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அதிக வேகத்தில் செல்கிறார்கள். அதுமட்டுமின்றி, அதிக பாரம் ஏற்றி செல்லும் இந்த வகைகளால் சாலைகள் பழுதடைந்து வருகிறது.

அதனால் கிராமப்புற சாலைகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே பாரம் ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் கார்த்திக் தங்கம், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக வாகனத்தை ஓட்டக்கூடாது, நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே பாரம் ஏற்றி செல்ல வேண்டும் என்று எச்சரித்து டிப்பர் லாரிகளை அனுப்பி வைத்தார். கனிம வளம் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் அப்பகுதியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: