பெரம்பலூரில் 1 முதல் 3ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு புதிய பாடத்தின் படி எண்ணும் எழுத்தும் பயிற்சி: மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

 

பெரம்பலூர், ஜூன் 2: பெரம்பலூர் மாவட்ட தொடக்கப்பள்ளியில் 1 முதல் 3ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு புதிய பாடத்தின் படி எண்ணும் எழுத்தும் பயிற்சியை மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை-2025 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள 1 முதல் 3ம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்களை ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தும் 3 நாள் பயிற்சி பெரம்பலூரில் துறையூர் சாலையிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது. நாளை 3ம்தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) முதுநிலை விரிவுரையாளர் சீரங்கன் வரவேற்று பேசும்போது: பயிற்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார்.

பயிற்சியை பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க கல்வி சங்கர் தொடங்கி வைத்து, புதிய பாடத்திட்டத்தின் நோக்கங்கள், குழந்தை மையக் கற்றல் அணுகுமுறைகள், செயல்பாடுகள் சார்ந்த கற்றல் மற்றும் மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் வெங்கடேசன் புதிய பாடநூல்களின் சிறப்பம் சங்கள், தொடக்கக் கல்வியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினார். இந்த பயிற்சியில் இரண்டு அறைகளில் 113 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் சின்னசாமி, மேற்பார்வையாளர் (பொ) சுதா, ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் இப்பயிற்சியில் கருத்தாளர்களாக ஆசிரிய பயிற்றுனர் நவநீத சோழன், இடைநிலை ஆசிரியர்கள் கார்த்திகேயன், சுதா, லீமாரோஸ் ஆகியோர் செயல்பட்டனர்.

Related Stories: