அரியலூர், ஜூன் 2: அரியலூர் மாவட்ட கலெக்டராக மிருணாளினி கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அரியலூர் கலெக்டர் மிருணாளினி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 2001ம் ஆண்டு கூட்டுறவுத்துறையில் துணை பதிவாளராக பணி நியமனம் பெற்றார். பின்னர் இணை பதிவாளர் நிலையில் புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பணிப்புரிந்தும், சென்னையில் கூடுதல் பதிவாளராக பணிப்புரிந்தார். கடந்த 2023ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கு (ஐ.ஏ.எஸ்.) பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சியினை மேற்கொண்டு, பெரும்புதூர் சார் ஆட்சியராகவும், தொடர்ந்து பெரம்பலூர் கலெக்டராக பணியாற்றி, தற்போது அரியலூர் கலெக்டராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட கலெக்டர் அவர்களுக்கு அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அரியலூர் புதிய கலெக்டர் பேட்டி: அரியலூர் மாவட்டம் தொழில் வளர்ச்சி இருக்கக்கூடிய மாவட்டமாக விளங்குகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில் சுற்றுசூழல் பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், மாசு கட்டுப்பாடு, குடிநீர் பிரச்னை, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, இளம் வயதில் குழந்தை திருமணம் நடைபெறுவதை தவிர்த்தல் குறித்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படாத வகையில் அரியவகை புதை படிமங்கள் உள்ளன. மேலும் கங்கைகொண்ட சோழபுரம் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்களும் உள்ளன அவற்றை கருத்திற்கொண்டு சுற்றுலாவிற்கும் மற்றும் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். மாவட்டத்தில் காற்றின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல் போன்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.
குழந்தைகள் திருமணம் தவிர்த்தல், சீரான குடிநீர் விநியோகத்தினை உறுதிபடுத்துதல், மேலும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு உடனடியாக சென்று அடையும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்தார்.
