பாபநாசத்தில் வீசிய திடீர் சூறாவளி – 200 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதம்

பாபநாசம்: கும்பகோணம் அருகே பாபநாசம் சுற்றுவட்டாரத்தில் வீசிய சூறாவளி காற்றால் 10,000-க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்து இருக்கிறது. பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளான ஈச்சங்குடி, சோமேஸ்வரபுரம், பட்டுக்குடி, வீரமாங்குடி உள்ளிட்ட சில இடங்களில் நேற்று மாலை திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் ஏராளமான அளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமாகி உள்ளன.

ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்தும், வயல்களில் தண்ணீர் தேங்கியும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. விவசாயிகள் ஏக்கருக்கு சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து உள்ளனர். எப்படியும் ஏக்கருக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்த தங்களுக்கு, இந்த திடீர் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

வெட்டும் தருவாயில் இருந்த இந்த வாழைகள் முற்றிலும் நாசமானதால், அப்பகுதி விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். எனவே தமிழக அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுப்பு நடத்தி, உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: