திருவொற்றியூர்: திருவொற்றியூர் குப்பத்தில் ரூ.270 கோடியில் கட்டப்பட்ட சூரை மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் கையாளப்படுவதில்லை. மீன் பதப்படுத்தப்படும் கூடம், ஐஸ் பேக்டரி, பெட்ரோல் பங்க் போன்ற வசதிகள் இன்னும் செய்யப்படாததால் மீனவர்கள் விசைப்படகுகளை கையாள தயங்குகின்றனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருந்து எண்ணூர் முதல் காசிமேடு வரை உள்ள கடலோர மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகுகள் மூலம் மீன்பிடிக்க செல்கின்றனர். மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்படும் 1500க்கும் மேற்பட்ட படகுகள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்படுகின்றன. குறைவான இடத்தில் அதிகப்படியான விசைப்படகுகள் நிறுத்தப்படுவதால் இடநெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் விசைப்படகு, பைபர் படகுகளை பாதுகாக்கவும் நெரிசல் இல்லாமல் நிறுத்தவும் தேவையான அடிப்படை வசதிகளுடன் திருவொற்றியூர் குப்பத்தில் ரூ.272.70 கோடி மதிப்பீட்டில் சூரை மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டு கடந்தாண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
இந்த துறைமுகத்தில் 400 விசை படகுகள், 250 பைபர் படகுகள் நெரிசல் இல்லாமல் நிறுத்தவும். நடைபாதை, மீன் ஏலம் விடும் கூடம், படகுகள் பழுதுபார்க்கும் மையம், மீன்பிடி வலைகள் பழுதுபார்க்கும் கூடம், செல்போன், வயர்லெஸ் தொலைதொடர்பு அறை, ஓய்வறை, கழிவறை போன்ற பல்வேறு வசதியுடன் 6 ஆயிரம் டன் மீன்களை கையாளும் வகையில் கட்டமைக்கப்பட்டது.
இந்நிலையில் சூரை மீன்பிடி துறைமுகம் திறக்கப்பட்டு ஓராண்டு ஆகிய நிலையில் பைபர் படகுகள் மட்டுமே இங்கே நிறுத்தப்பட்டு அதன் மூலம் மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சூரை மீன்பிடி துறைமுகத்தில் முக்கிய நோக்கமான விசைபடகுகள் இதுவரை கையாளப்படவில்லை. சூரை மீன்பிடி துறைமுகத்தில் திட்டமிடப்பட்ட மீன் பதப்படுத்தும் கூடம், ஐஸ் பேக்டரி, பெட்ரோல் பங்க் போன்ற முக்கியமான திட்டங்கள் இதுவரை செயல்படுத்தாததால் விசைப்படகுகள் வர முடியாததற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:
ஆழ்கடலுக்கு விசைப்படகு மூலம் சென்று ஏற்றுமதி செய்யக்கூடிய சூரை மற்றும் கோலா மீன்கள் மற்றும் உள்நாட்டு விற்பனைக்காக பிடித்து வரக்கூடிய மீன்கள் ஆகியவற்றை கையாள்வதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகத்தில் இதுவரை கட்டமைக்கப்படவில்லை. குறிப்பாக, மீன்களை பதப்படுத்துதல், மீன் பிடிக்க செல்லும்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஐஸ் மற்றும் விசைபடகு செலுத்த தேவையான டீசல் மையங்கள் இங்கு இல்லை. இதனால் விசை படகுகளை இங்கு கொண்டு வருவதற்கு மீனவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஐஸ் பேக்டரி, பதப்படுத்தும் கூடம் மற்றும் டீசல் மையம் ஆகியவற்றை தனியார் மூலம் கட்டமைக்க கடந்த மார்ச் மாதம் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது முழுமையாக செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது. திட்டமிட்டபடி மீன்பிடி தொழிலுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுக்க வேண்டும். துறைமுகத்தில் படகுகளை கையாள்வது மற்றும் மீன்பிடி தொழில் செய்வதில் உள்ள சிரமங்களை மீனவர்களிடம் கேட்டறிந்து அவற்றை முழுமையாக சீரமைக்க வேண்டும். இதை செயல்படுத்தினால் மட்டுமே இந்த சூரை மீன்பிடி துறைமுகம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
