ஸ்ரீபெரும்புதூர் அருகே வானுயர கரும்புகை எழுந்தது; பிரபல கார் தொழிற்சாலை மற்றும் குடோனில் பயங்கர தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல கார் தொழிற்சாலை மற்றும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இங்கு ஹூண்டாய் கார்களுக்கு டேஷ்போர்டு, ஸ்பீக்கர் போன்ற உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலையில் உற்பத்தியின் போது வீணாகும் ஸ்கிராப் பொருட்கள் தொழிற்சாலைக்கு பின்புறம் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று சேமிப்பு குடோனில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. சில நிமிடத்தில் தொழிற்சாலையின் உற்பத்தி பகுதிக்கும் தீ மளமளவென கொழுந்துவிட்டு பரவியது.

தொழிற்சாலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறினர். தொழிற்சாலையில் பற்றிய தீயால் அங்கு வானை தொடும் அளவிற்கு சுமார் 5 கிலோ மீட்டர் வரை கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ கட்டுக்குள் கொண்டுவர போராடினர். தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்ததால், மிகவும் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து தனியார் தொழிற்சாலைகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள், உற்பத்தி இயந்திரங்கள், தீயில் எரிந்து சேதம் அடைந்தன. ஸ்ரீபெரும்புதூர் போலீசார், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா.? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எரிபொருளை பாதுகாப்பதில் தவறு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: