சென்னை: விளையாட்டு துறை அமைச்சராக இருந்து கொண்டு பிஎப்ஐ தலைவர் பதவியில் ஆதவ்அர்ஜூனா நீடிப்பதா? என்று அதிமுக எம்பி இன்பத்துரை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்து பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை இழுக்கும் படலத்தில் தவெக இறங்கியுள்ளது. குதிரை பேரத்தில், குதிரை வேகத்தில் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. அந்த வகையில் அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை கடந்த 25ம்தேதி ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த கையோடு சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூன்று பேரும் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர்.
கட்சியில் இணைந்த மறுநிமிடமே அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. தலைமை செயலகத்திலே ஒரு அமைச்சர் முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமை செயலகமா? அல்லது தவெக அலுவலகமாக என்று அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “90 சதவீத அதிமுக நிர்வாகிகள் தவெகவிற்கு மாறத் தயாராக இருக்கிறார்கள்’’ என்றார். இது அதிமுக தலைவர்கள் இடையே கடும் கோபத்தை உருவாக்கியிருந்தது. உடனடியாக அதிமுக தலைவர் பதிலடி கொடுத்தனர். ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர். அரசியல் அதிகார பலம், பண பலத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி நிர்வாகிகளை வளைக்க பார்க்கிறார் என்று குற்றம் சாட்டினர்.
அதே நேரத்தில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியிலும் ஆதவ் அர்ஜூனா இருந்து வருகிறார். இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர்(பிஎப்ஐ) அதிகாரப்பூர்வ இணையதளத் தரவுகளின்படி, அவர் இன்னமும் அந்த அமைப்பின் தேசிய தலைவராக தொடர்ந்து நீடித்து வருகிறார். விளையாட்டுத் துறையை அரசு ரீதியாகக் கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டிய அமைச்சரே, ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் தேசிய கூட்டமைப்பைத் தலைமை தாங்கி நடத்தும் நிர்வாகியாகவும் இருப்பது முறையற்றது என்று அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனவே அவரை இந்திய கூடைப்பந்து சம்மேளன (பிஎப்ஐ) தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த விவகாரத்தை தற்போது அதிமுகவினர் கையில் எடுத்து உள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக எம்பி இன்பத்துரை தனது சமூக வலைத்தளம் பதிவில், ‘’தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் (பிஎப்ஐ) தலைவர் பதவியையும் தொடர்ந்து வகித்து வருகிறார். இதனை பிஎப்ஐ இணையதளம் உறுதிப்படுத்துகிறது. இது பரஸ்பர நலன்களின் முரண்பாடு குறித்த கடுமையான கவலைகளை எழுப்புகிறது. பாரபட்சமற்ற விளையாட்டு நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கிறது. நிர்வாகம் நியாயமாக இருக்க வேண்டும் என்றால், அங்கு ஒருதலைப்பட்சமான சார்புநிலை இல்லாமல் இருந்தால் மட்டும் போதாது; சார்புநிலை இருப்பது போன்ற தோற்றமும் கூட இருக்கக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ள இந்த விவகாரத்தில், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது தேசியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது அந்த பதவியில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற பரபரப்பு தற்போது உருவாகியுள்ளது.
