கோவை: தமிழக பாஜவின் முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வரும் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சட்டமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்கு பிறகு அண்ணாமலையின் இந்த ஆண்டு பிறந்தநாளை கோவையில் உள்ள அவரது ஆதரவாளர்களும், பாஜ தொண்டர்களும் பிரமாண்டமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். சமீபத்தில் ஒன்றிய அரசை கண்டித்து அண்ணாமலை கடுமையான அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனால் அவர் தனது பிறந்த நாளின் போது புதிய கட்சியை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாஜவின் முன்னாள் கோவை மாநகர் தலைவர் உத்தம பாலாஜி ராமசாமி, கோவை மாநகர் முழுவதும் அண்ணாமலையை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டி உள்ளார். சிங்காநல்லூர், அவிநாசி சாலை உள்ளிட்ட மாநகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.
அதில், ‘‘எங்கள் தலைவா தலைமை ஏற்க வா’’, ‘‘வையத் தலைமைகொள்!’’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டு, அண்ணாமலையின் பிரம்மாண்ட படங்களும் இடம் பெற்றுள்ளது. தமிழக அரசியலில் அண்ணாமலை மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்த வேண்டும் என்ற தொண்டர்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த வாசகங்கள் அமைந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த போஸ்டர்கள், சமூக வலைதளங்களிலும் அண்ணாமலையின் ஐடி விங் மூலமாக டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
