கரூரில் நடந்த பெருந்துயரம்; விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான வழக்கு இரண்டு மாதமாக தூங்குகிறது சிபிஐ: மீண்டும் விசாரணை துவங்குவது எப்போது?

 

திருச்சி: கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ இரண்டு மாதமாக தூங்குவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடன் விஜய் கரூரில் தங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாமல், இரவோடு இரவாக சென்னை சென்று விட்டார். மேலும், ஒரு மாதம் கழித்தே பாதிக்கப்பட்டவர்களை சென்னை பனையூருக்கு அழைத்து ஆறுதல் கூறினார்.

நேரில் சென்று ஆறுதல் சொல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு அழைத்து ஆறுதல் கூறியது பல தரப்பினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சம்பவத்திற்கு பிறகு அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில் இந்த வழக்கை ஆரம்பத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. அதேபோல் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ கைக்கு வழக்கு மாறியது. கடந்த அக்டோபரில் சிபிஐ விசாரணையை துவக்கியது. கரூரில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட சிபிஐ அதிகாரிகள் உள்ளூர் மக்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், வியாபாரிகள் ஆகியோரை கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் மாளிகைக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் தற்போது அமைச்சர்களாக உள்ள ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் கலெக்டர், எஸ்பி ஆகியோரையும் அழைத்து விசாரித்தனர். மேலும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தற்போதைய முதல்வரும், தவெக தலைவருமான விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விஜய், கடந்த ஜனவரி 15, 18, 19ம் தேதிகளில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் நடந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேபோல் கடந்த மார்ச் 17ம் தேதி முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜியையும் டெல்லிக்கு அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

அதன்பிறகு சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக யாரிடமும் விசாரணை நடத்தவில்லை. தேர்தல் முடிந்து தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று விட்டார். வாக்குப்பதிவு ஏப். 23ம் தேதி நடந்தது. மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதுவரை இந்த விவகாரத்தில் சிபிஐ எதுவும் செய்யாமல் அமைதியாகவே உள்ளது. சம்பவம் நடந்து 8 மாதங்களை கடந்தும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்கை விரைந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த வழக்கை பொறுத்தவரை சிபிஐ மெத்தனம் காட்டுவதாகவே தெரிகிறது.

2 மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விஜய் முதல்வராகி விட்டார் என்பதற்காக வழக்கை கிடப்பில் போடக்கூடாது. ஒன்றல்ல, இரண்டல்ல 41 பேர் இறந்துள்ளனர். உரிய முறையில் இந்த வழக்கை விசாரித்து குற்றவாளிகள் யார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர ேவண்டும். எனவே சிபிஐ மீண்டும் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றனர். கரூரில் 41 பேர் பலியான வழக்கில் 8 மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை.

கரூர் மதியழகனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி?
அதிமுகவின் சி.வி.சண்முகம் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் மயிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதால், எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த இடத்துக்கு வரும் ஜூன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிக எம்எல்ஏக்கள் உள்ள கட்சி என்ற அடிப்படையில் இந்த எம்பி பதவி தவெகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த எம்பி பதவி கரூர் மாவட்ட தவெக செயலாளராக உள்ள மதியழகனுக்கு கிடைக்கும் என்று தவெக தரப்பில் கூறப்படுகிறது. 41 பேர் பலி வழக்கில் கைது செய்யப்பட்டவர் மதியழகன். இவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். எனவே இவரை எம்பியாக்க கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: