கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது, விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது, விஐபி தரிசனம் ஏன்? என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு கட்டண தரிசனத்தை ரத்து செய்யக் கோரி விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், ‘தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு என்ற பெயரில், 500 ரூபாய் வரை பணம் வசூலித்து, சிறப்புக் கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயில்களில் பணம் வசூலித்து, சிறப்பு தரிசனம் செய்ய எந்த சட்டப் பிரிவுகளும் அனுமதி வழங்கவில்லை. கடந்த 1967-ம் ஆண்டுக்கு பின் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண தரிசன முறை காரணமாக, சாதாரண மக்கள் சாமி தரிசனத்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், புதுமண தம்பதிகள், பால்குடம் எடுப்பவர்கள், காவடி எடுப்பவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், உபயதாரர்கள் உள்ளிட்டோருக்கு இலவச சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்.

பணத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டும் இந்த திராவிட தர்மம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. கோயில்களில் சிறப்புக் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாட்டு கோயில்களில் விஐபி தரிசனத்துக்காக தனி நேரத்தை ஏன் ஒதுக்கக்கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்கவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது ஏன் தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது, விஐபி தரிசனம் ஏன்? என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பணம் கொடுத்தால் கடவுளை கட்டியணைக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்; தமிழ்நாட்டு கோயில்களில் விஐபி தரிசனத்துக்காக தனி நேரத்தை ஏன் ஒதுக்கக்கூடாது? என தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: