நியூசண்டிகர்: ஐபிஎல் 2026 எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று, நியூ சண்டிகரில் நேற்று நடந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். துவக்கம் முதல், வைபவ் அட்டகாசமாக ஆடி பந்துகளை, சிக்சருக்கும், பவுண்டரிக்கும் விரட்டி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
29 பந்துகளை எதிர்கொண்ட அவர் 12 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 97 ரன் விளாசி, பிரபுல் ஹிங்கே பந்தில் ஆட்டமிழந்தார். அதனால், 2013ல், 30 பந்தில் சதம் விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்கும் அரிய வாய்ப்பை, வைபவ் நூலிழையில் தவறவிட்டார். அதையடுத்து, ஜெய்ஸ்வாலுடன், துருவ் ஜுரெல் இணை சேர்ந்தார். ஆனால் சிறிது நேரத்தில் சிவாங் குமார் பந்தில், ஜெய்ஸ்வால் (29 ரன்) அவுட்டானார். அதன் பின் இணை சேர்ந்த துருவ் ஜுரெல், கேப்டன் ரியான் பராக் இணை சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஹிங்கே வீசிய 14வது ஓவரில் ஜுரெல் (21 பந்து, 50 ரன்), விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து ஹிங்கே வீசிய 16வது ஓவரில் ரியான் பராக் 26 ரன்னில் வீழ்ந்தார். அதன் பின் சொற்ப ரன்களில் விக்கெட்டுகள் சரிந்தன. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான், 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் ஹிங்கே 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
