ஐபிஎல் முதல் எலிமினேட்டர் போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்கை சமாளிக்குமா ராயல்ஸ்?நியூ சண்டிகரில் இன்றிரவு பலப்பரீட்சை

 

சண்டிகர்: நியூ சண்டிகரில் இன்றிரவு நடக்கும் ஐபிஎல் முதல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. ஐபிஎல் தொடரின் முதலாவது எலிமினேட்டர் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு நியூ சண்டிகரில் நடக்கிறது. இதில் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன், 4வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. நடப்பு தொடரில் 14 போட்டிகளில் ஆடியுள்ள சன்ரைசர்ஸ் அணி, 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்றுள்ளது. இதேபோல் 14 போட்டிகளில் ஆடியுள்ள ராஜஸ்தான் அணி, 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது.

நடப்பு தொடரில் ஏற்கனவே இந்த இரு அணிகள் மோதியதில், ஒரு போட்டியில் 57 ரன் வித்தியாசத்திலும், மற்றொரு போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசை பலம் நிறைந்ததாக காணப்படுகிறது. குறிப்பாக, அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில், விக்கெட் கீப்பர் கிளாசன் 606 ரன்களுடன் 3வது இடத்திலும், இஷான் கிஷன் 569 ரன்களுடன் 6வது இடத்திலும், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 563 ரன்களுடன் 8வது இடத்திலும் உள்ளனர்.

இதுதவிர டிராவிஸ் ஹெட், கேப்டன் கம்மின்ஸ், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோரும் பேட்டிங்கில் ஜொலிக்கின்றனர். இதேபோல் பவுலிங்கை பொறுத்தவரை, அந்த அணியின் இஷான் மலிங்கா நடப்பு தொடரில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை அளிக்கிறார். இவருடன், ஷாகிப் உசைன், கம்மின்ஸ், சிவங் குமார் ஆகியோரும் ஒத்துழைத்தால், ராஜஸ்தானை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

மறுபுறம் ராஜஸ்தான் அணியில் தொடக்கவீரர் சூர்யவன்ஷி தனது சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறார். நடப்பு தொடரில் இதுவரை அவர் 583 ரன் குவித்துள்ளார். அவருடன் மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், கேப்டன் ரியான் பராக், துருவ் ஜூரல், ஜடேஜா ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். அந்த அணியின் பவுலிங்கை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் 21 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இவருடன் பர்கர், ரவி பிஷ்னோய் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ராஜஸ்தான் அணியுடன் ஒப்பிடுகையில், பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் ஐதராபாத் அணியின் கை ஓங்கியுள்ளது. இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: