தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? அமைச்சர் ராஜ் மோகன் பேட்டி

 

சென்னை: தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா, இல்லையா என்பதற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜூன் 1ம் தேதி பள்ளி திறப்பு என அறிவித்து இருந்தோம். ஆனால், பல்வேறு தரப்பில் இருந்து அதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை வந்தது.

எனவே, இது தொடர்பாக அறிவியல் பூர்வமான சிலவற்றை வானிலை ஆய்வு மையத்திடம் கேட்டுள்ளோம். குறிப்பாக அந்த ஒருவாரம் கோடை காலம் இருக்குமா, வெப்ப அலை இருக்குமா அல்லது பருவமழை தொடங்கிவிடுமா என்பது தொடர்பான அறிவியல் பூர்வமான கோப்புகளைக் கேட்டுள்ளோம். அது வந்த பிறகு முதல்வரிடம் சமர்ப்பித்து, என்ன முடிவு எடுக்கலாம் என ஆலோசித்து அறிவிக்கப்படும்.

பள்ளிகளில் நாம் பாடத்திற்காக செலவு செய்யும் மணிநேரம் 1,050 லிருந்து 950ஆக குறைந்துள்ளது. 10 நாள்கள் தள்ளி பள்ளியை திறந்தால் அதை எப்படிச் சரிசெய்வோம் என்பதும் உள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும். 3ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு 4ம் தேதிதான் பள்ளி தொடங்கும். பள்ளிக் குழந்தைகளுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் சார்ந்த பிரச்னைகள் தொடர்பான புகார் அளிப்பதற்கான எண்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1ம் வகுப்பில் இருந்தே அவர்கள் தெரிந்துகொள்ள அந்த எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

காலை மற்றும் மதிய உணவுத் திட்டம் தொடரும். அந்த திட்டங்களை மேம்படுத்துவோம். பள்ளிக் கல்வித்துறை பழைய பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகளை புறம்தள்ளி அறிவியல் கண்டுபிடிப்புகள், சமத்துவம், சமூக நீதிக்கு முன்னுரிமை கொடுப்பதுதான் பள்ளிக் கல்வித்துறை. மாணவர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் மற்றும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம்.

Related Stories: