கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெறப்பட்ட குறு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய் உத்தரவு

 

சென்னை: கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதல்வர் விஜய் அறிவுத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025ம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 1.5.2025 முதல் 28.2.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும். இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 1.5.2025 முதல் 28.2.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

* சொன்னது ஒன்று! செய்தது வேறு! விவசாயிகளை ஏமாற்றிய விஜய்

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ‘‘5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்’’ என அறிவித்தது. அதாவது, குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி என் அறிவித்தது. ஆனால், தற்போது அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடியில் பல்வேறு படிநிலைகளில் தள்ளுபடி அறிவித்துள்ளது தவெக அரசு.

மேலும், 2025 மே மாதம் முதல் 2026 பிப்ரவரி வரையில் பெற்ற கடன்களில் மட்டுமே இந்த தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலதனச் செலவு அதிகரிப்பு, இடுபொருள் விலையேற்றம், பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள், நீர் பற்றாக்குறை, விளைச்சல் குறைவு, போதுமான விலை இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளையும் வாழ்வாதாரச் சிக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் தவெக அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தால் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளை ஏமாற்றியுள்ளது தவெக அரசு.

Related Stories: