காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூட உள்ள நிலையில் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலை என்ன? அதிகாரிகளுக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்காத முதல்வர் விஜய்

 

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு குறித்து எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் மேகதாது அணை கட்ட அனுமதி அளிப்பது குறித்து பரிந்துரைக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள ஆணையம் 2019ம் ஆண்டில் கேட்டுக்கொண்டது.

மேகதாதுவில் அணை அணை கட்டி முடிக்கப்படும். இதற்கு தமிழ்நாட்டின் அனுமதியும் தேவையில்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறி வருகிறார். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு குறுக்கு வழியிலாவது அனுமதி பெற்றுவிட வேண்டும் என்று கர்நாடக அரசுதுடித்துக் கொண்டிருக்கிறது.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் அங்கம் வகிக்கும் 4 மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பே அரசுகள் பொறுப்பெற்றுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவது குறித்து விவாதிப்பதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கர்நாடக அரசு சிக்கல் எழுப்ப வாய்ப்புள்ளது. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து காவிரி மேலாண்மை கூட்டத்தில் தெரிவிப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் 13.11.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் சீராய்வு மனு 11.12.2025 தேதியில் தாக்கல் செய்யப்பட்டது. அச்சீராய்வு மனு முந்தைய ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு தற்சமயம் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்ப்பு விவரங்களைக் கருத்தில் கொண்டு விரிவான சட்ட ஆலோசனைக்கு பின் உடனடியாக எடுக்க வேண்டிய தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் சார்பில் எத்தகைய நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் பங்கேற்கும் நீர்வளத்துறை செயலாளருக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் தவறான நிலைப்பாட்டை எடுத்தால் அது தமிழ்நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் நிலை உருவாகி உள்ளது.

Related Stories: