புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், கடந்த காலத்தை மறந்துவிட்டு எதிர்கால வளர்ச்சிக்காக பாடுபடுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நான்கு அரை மணி நேரமாக நடைபெற்றது. கடந்த 11 மாதங்களில் முழு அமைச்சரவையும் கூடிய கூட்டம் என்பதால் பரபரப்பாக காணப்பட்டது. அடுத்த மாதம் ஜூன் 9ம் தேதியுடன் ஒன்றிய அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய பிரதமர் மோடி, ‘நடந்து முடிந்த விஷயங்களை மறந்து விடுங்கள். வரும் காலத்தை நோக்கி கவனத்தை திருப்புங்கள். நிர்வாகத்தில் தேவையற்ற தாமதங்களைத் தவிர்த்து, கோப்புகளை விரைவாக நகர்த்த வேண்டும்.
சீர்திருத்தங்கள் வெறும் காகிதங்களில் மட்டும் இருக்கக்கூடாது, அவை மக்களுக்கான எளிமையான நிர்வாகமாக மாற வேண்டும்’ என்று அமைச்சர்களுக்கு அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார். அடுத்த கட்டமாக, அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என்ற பேச்சு அடிபடும் சூழலில் இந்த கூட்டம் நடந்துள்ளது. இதில் ‘விக்சித் பாரத் 2047’ என்ற தொலைநோக்கு பார்வையை மையமாகக் கொண்டு அனைத்து அமைச்சகங்களும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் வேளாண்மை, தொழிலாளர், சாலை போக்குவரத்து, வெளியுறவுத்துறை உள்ளிட்ட ஒன்பது முக்கிய துறைகள் தங்கள் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தன. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசு மேற்கொண்ட ஐந்து நாடுகளுக்கான தூதரக பயணங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
ஒன்றிய பாஜக அரசு கடந்த 12 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். இருப்பினும், கடந்த கால தோல்விகளை மறைக்க ‘கடந்த காலத்தை மறந்து விடுங்கள்’ என்று பிரதமர் கூறுவது, ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளை மூடி மறைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலில், தனது ஆட்சியின் போதாமைகளை மறைக்க அமைச்சர்களை திசைதிருப்பும் வேலையில் பிரதமர் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக, மக்களின் உண்மையான பிரச்னைகளை தீர்ப்பதை விட, விளம்பரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
