சென்னை: சுட்டெரிக்கும் கோடை வெளியில் காரணமாக நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மின்தேவை அதிகரித்து உள்ளது. இந்தியாவில் கடுமையான வெப்ப அலை காரணமாக, ஒரே நாளில் இந்தியாவின் உச்சபட்ச மின்தேவை (Peak Power Demand) புதிய உச்சமாக நேற்று 270.82 ஜிகாவாட்டை எட்டியது. ஏர் கண்டிஷனர்கள் மற்றும் குளிர்சாதனப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததால், தொடர்ந்து நான்காவது நாளாக மின்தேவை அளவு புதிய சாதனையை படைத்துள்ளது.
நேஷனல் பவர் போர்டல் (National Power Portal) தரவுகளின்படி, இந்த 270.82 ஜிகாவாட் என்று மின்தேவையின் புதிய உச்சம் நேற்று (மே 21) பிற்பகல் 3:45 மணியளவில் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். முன்னதாக நேற்று முன்தினம் அதாவது 2026, மே 20-ஆம் தேதி 265.44 ஜிகாவாட்டாக இருந்த நாட்டின் உச்சபட்ச மின்தேவை, ஒரே நாளில் சுமார் 5 ஜிகாவாட் வரை அதிகரித்து இந்த புதிய எல்லையை தொட்டது.
நாட்டின் இந்த உச்ச மின்தேவையை பூர்த்தி செய்வதில் அனல் மின்சாரம் (Thermal) 62.8%, சூரிய சக்தி (Solar) 22%, காற்றாலை (Wind) 5%, மற்றும் நீர்மின்சாரம் (Hydro) 5.8% என்ற அளவில் பங்களித்து உள்ளன. மத்திய மின்சார ஆணையம் (Central Electricity Authority) இந்த கோடையில் நாட்டின் உச்சபட்ச மின் தேவை 271 ஜிகாவாட்டை எட்டும் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 4 நாட்களாக மின்பயன்பாடு அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அடுத்த 7 நாட்களில் மின்தேவை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
