சென்னை: சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என அவதூறுவழக்கில் கைதான துபாய் செவிலியர் ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் வெள்ளை கலர் கோட்டு போட்டுக்கொண்டு திடீர் ஆய்வு செய்த சம்பவம் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுக்கு ஆள் சமூக ஆர்வலர்கள் என்று கிளம்பிவிட்டால் அரசு மருத்துவமனைகளின் நிலைமை என்ன ஆகும் என்று டாக்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு தமிழகம் முழுவதும் பல விசித்திரமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. சினிமா காட்சிகள் போல் பல இடங்களில் தவெகவினர் ‘எங்கள் அண்ணன் தான் முதல்வர்’ என்று கூறிக்கொண்டு அரசு அலுவலகங்களில் பறக்கும் படை போன்று அதிரடி ஆய்வுகள் செய்து வரும் சம்பவம் தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தவெக பெண் நிர்வாகி ஒருவர் தன்னை தமிழக வெற்றிக் கழக மருத்துவ அணியினர் என்று கூறிக்கொண்டு தன்னுடன் வாலிபர்களை அழைத்து கொண்டு வெள்ளை கலர் கோட் போட்டு கொண்டு திடீர் ஆய்வு செய்துள்ளார். தன்னை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் என்ற நினைப்பில் அவர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து வருகைப்பதிவேடு, எத்தனை பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் என்ன என்று அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
அதோடு இல்லாமல் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நன்றாக இருக்கிறதா என்றும் தனது ஆதரவாளர்களுடன் சோதனை நடத்தியுள்ளார். இதை விட கொடுமை என்னவென்றால், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்னையில் இருந்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் யாரோ வருகிறார்கள் என்று மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் பரபரப்பாக இருந்துள்ளனர். ஆனால் தவெக பெண் நிர்வாகி ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் உள்ளூர் யூடியூப் சேனல்களை அழைத்து கொண்டு வந்து, பெண் நிர்வாகி மருத்துவமனையை ஆய்வு செய்ததை படம் பிடித்துள்ளனர். நோயாளிகளிடம் உங்களுக்கு சரியாக மருத்துவம் அளிக்கப்படுகிறதா என்றும் கேட்டுள்ளனர்.
நோயாளிகள் ‘பெரிய டாக்டர் அம்மாவாக இருப்பாங்களோ’ என்று நினைத்து, அவர்கள் குறைகளையும் தவெக பெண் நிர்வாகியிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய பெண் யார் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, தான் செவிலியராக படித்துவிட்டு துபாயில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்து பெண் என்றும், இவர் விஜய் கரூர் பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது துபாயில் இருந்து தனது யூடியூப் சேனலில் ‘கூட்ட நெரிசலுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம்’ என்று எந்த வித ஆதாரங்களும் இன்றி வீடியோ பதிவு ெசய்தார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் படி சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது அந்த பெண் துபாயில் இருந்தது தெரியவந்தது. பின்னர் துபாயில் இருந்து தமிழகம் திரும்பியதும், சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில் பெண் செவிலியரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
அதை தொடர்ந்து தன்னை தவெகவின் தீவிர ஆதரவாளர் என்று தன்னை தானே யூடியூப் சேனல்களில் முன்நிறுத்தி கொண்டு சுற்றி வருவதும் தெரியவந்தது.
பின்னர் தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தவெக பெண் நிர்வாகி சோதனையின் போது உடன் இருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் ‘யார் சோதனை செய்ய வருகிறார்கள் என்று கூட தெரியாமல் அவர்களுக்கு விளக்கம் அளிப்பீர்களா…. சோதனை செய்ய வந்த பெண் அரசு டாக்டரா, அல்லது அரசு அதிகாரியா, இல்லை எம்எல்ஏவா, உள்ளாட்சி துறை நிர்வாகியா… கவுன்சிலர் கூட இல்லாத ஒரு பெண் செவிலியர் தன்னை தவெக மருத்துவ அணி நிர்வாகி என்று கூறி அரசு மருத்துவமனைக்குள் எப்படி விடலாம் என்று என கடுமையாக சாடியுள்ளனர்.
இது போன்று அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களில் தவெக நிர்வாகிகள் என்று அவரவர் சோதனை நடத்தினால் பொதுமக்களின் நிலைமை என்ன ஆகும். அரசு துறைகளில் இது போல் தனி நபர் சோதனை நடத்த யார் உரிமை கொடுத்தது. அதற்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது. செவிலியராக படித்த பெண் ஒருவர், பெரிய அரசு மருத்துவமனையில் மூத்த டாக்டர்களிடம் விசாரணை நடத்த கூடிய அளவுக்கு தைரியம் கொடுத்தது யார் என்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர். இது போல் ஒவ்வொரு தனி மனிதனும் சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்தால், எப்படி அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை செய்வார்கள். அரசு துறை பொதுமக்களுக்கு சேவை செய்யும் துறைகள். ஆளாளுக்கு இப்படி தவெக நிர்வாகிகள் என்று கிளம்பி சோதனை நடத்த சென்றால் தமிழக மக்களின் நிலைமை என்ன ஆகும்.
எனவே மக்கள் பிரதிநிதிகளை தவிர தவெக நிர்வாகிகள் என்ற போர்வையில் இது போன்ற நிகழ்வுகள் எந்த அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களில் நடக்காமல் இருக்க தவெக தலைமை கண்டிக்க வேண்டும் என்று பொதுமக்களின் கருத்தாக உள்ளது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் துபாய் செவிலியரின் அலப்பறை சமூக வலைத்தளங்களில் ெபாது மக்களின் கடுமையான கண்டனத்துடன் வைரலாகி வருகிறது.
