சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அச்சங்கத்தின் தலைவர் ரமேஷ் அளித்த பேட்டி: தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனத்தின் அறிவுறுத்தலின்படி, ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய வேண்டும் என இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், மருந்தாளுநர் இல்லாமல் நடக்கும் சட்டவிரோத ஆன்லைன் மருந்து விற்பனையால் பொதுமக்களின் உயிருக்கு பேராபத்து ஏற்படுகிறது.
எனவே ஒன்றிய அரசு உடனடியாக ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைனில் முறையற்ற முறையில் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும். போதைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆன்லைனில் கட்டுப்பாடின்றி விற்கப்படுவதால் இளைஞர்கள் சீரழிகின்றனர். இதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மேலும் ஆன்லைனில் மருந்து வாங்குவதற்காக ஏஐ-யைப் பயன்படுத்தி போலியான மருந்து சீட்டைப் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி, புற்றுநோய், இதய நோய் போன்ற உயிர்காக்கும் மருந்துகளைத் தரமற்ற முறையில், காலாவதியான மருந்துகளை விற்று மக்கள் உயிரோடு விளையாடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்லைன் வர்த்தகம் மூலம் போலி, தரமற்ற, உயிருக்கு ஆபத்தான மருந்துகள் சர்வசாதாரணமாக விற்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி பல நபர்கள் உயிரிழக்கின்றனர். எனவே இது அனைத்தும் தடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 40,000க்கும் மேற்பட்ட மருந்து வணிகர்கள் மற்றும் அகில இந்திய அளவில் 12.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்து வணிகர்கள் மற்றும் அவர்தம் ஊழியர்களின் குடும்பங்கள் மொத்தம் 40 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் செயல்படும் வெளிநாட்டு நிதியுதவி பெற்ற இ-பார்மஸி நிறுவனங்களின் அத்துமீறலை ஒன்றிய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
மக்கள் நலன் கருதி மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள மருந்தகங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் தமிழகத்தில் இந்த போராட்டம் 12 மணி நேரம் மட்டுமே நடைபெறும். மக்கள் நலன் காக்கும் மருந்து வணிகர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக ஆன்லைன் மருந்து விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். இல்லையெனில், அடுத்த கட்டமாக காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை அறிவிக்க நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்..
5,000 மருந்துக்கடைகள் இன்று திறந்திருக்கும்-அமைச்சர் அருண்ராஜ்
சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவமனையுடன் இணைந்த மருந்தகங்கள், அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருந்தகங்கள், மாவட்ட மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருந்தகங்கள், தனியார் மருத்துவமனை மருந்தகங்கள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். கிட்டத்தட்ட 5,000 மருந்தகங்கள் திறந்திருக்கும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 மருந்து ஆய்வாளர்கள் ஒருங்கிணைப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுடன் பேசியுள்ளோம். அவர்கள் சார்பில் 2 பேரை நியமித்துள்ளனர். எனவே, ஏதேனும் அவசரகால மருந்து தேவைப்பட்டால், சுகாதாரத் துறை சார்பில் நியமிக்கப்பட்டவர்களை அல்லது மருந்து வணிகர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
