வேலூர்: வேலூர் பொய்கை மாட்டுசந்தைக்கு கோடை வெயிலால் கால்நடைகளின் வரத்து சரிந்துள்ளது. வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
கால்நடைகள் மட்டுமின்றி அதோடு இணைந்த காய்கறி சந்தையும் இங்கு நடக்கிறது. சாதாரணமாக இங்கு கால்நடைகள் விற்பனை என்பது ரூ.70 லட்சம் முதல் ரூ.1.30 கோடி வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடைபெறும். இந்நிலையில் இன்று நடந்த மாட்டு சந்தையில் 700க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கோடை வெயில் தாக்கத்தால் குறைந்த அளவிலான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் எதிர்பார்த்த அளவில் கோடை மழையும் இல்லை என்பதால், மாடுகள் விற்பனைக்கு குறைந்த அளவில் கொண்டு வரப்பட்டது. மழை பெய்தால் ஜூன் மாதத்திற்கு பிறகு மாடுகளின் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்று கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வந்தது. இதனால் விற்பனை ரூ.70 லட்சம் வரை மட்டுமே நடந்தது’ என்றனர்.
