மதுரை: மதுரையில் மது போதையில் பேக்கரிக்குள் புகுந்து அடித்து நொறுக்கிய கும்பல் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டம், மணியங்குடியை சேர்ந்தவர் ரகுபதி. இவர், மதுரை ஆண்டார்கொட்டாரம் அய்யனார் நகர் பகுதியில் பேக்கரி வைத்துள்ளார்.
நேற்று இந்த பேக்கரிக்கு மது போதையில் 3 பேர் வந்தனர். திடீரென போதை தலைக்கேறிய நிலையில், பேக்கரிக்குள் புகுந்து கல்லாபெட்டி இருந்த இடத்தில் எச்சில் துப்பியுள்ளனர். உரிமையாளர் ரகுபதி, இதுகுறித்து கேட்டபோது, அவரை ஆபாசமாகத் திட்டிய மூவர் கும்பல், ‘நீ எந்த ஊருக்காரன்? இங்கே வந்து ஏன் கடை வைத்திருக்கிறாய்’ எனக் கேட்டபடி கடையில் இருந்த கண்ணாடி ஷோகேஷ் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைக்கத் தொடங்கினர். இதனை தடுக்க முயன்ற ரகுபதியையும் தரையில் தள்ளி விட்டு, கும்பல் கொலை மிரட்டல் விடுத்தது.
பின்னர் கும்பல் வெளியேறியதும் ரகுபதி கடையின் ஷட்டரை மூடினார். அப்போதும் விடாத கும்பல், வெளியில் கிடந்த கல்லை எடுத்து வீசியது. ‘மூடிய ஷட்டரை திறந்தால் உன்னை கொலை செய்து விடுவேன்’ என்றபடி மிரட்டி விட்டு கும்பல் தப்பியது. மதுரையில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மதுபோதையில் வந்த கும்பல் பேக்கரியை அடித்து நொறுக்கி பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ள சம்பவம் இப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருப்பாயூரணி காவல் நிலையத்தில் ரகுபதி புகார் அளித்தார். விசாரணையில், கடையை அடித்து நொறுக்கிய கும்பல் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், சுந்தரபாண்டி உள்ளிட்ட 3 பேர் எனத்தெரிந்தது. இதற்கிடையில் மது போதையில் கும்பல் பேக்கரியை அடித்து நொறுக்கி, கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
