புவனமாகி நின்றளும் அம்பிகை

212. மஹா ரூபா, 213. மஹா பூஜ்யா, 214. மஹா பாதகநாசிநீ, 215. மஹா மாயா, 216. மஹா ஸத்வா, 217. மஹா சக்திர், 218. மஹாரதி. 219. மஹா போகா, 220. மஹைச்வர்யா, 221. மஹா வீர்யா, 222. மஹாபலா, 223. மஹாபுத்திர், 224. மஹா ஸித்திர், 225. மஹா யோகேச்வரேச்வரீ அல்லது மஹா யோகேஸ்வரேஸ்வரி.
இதற்கு முந்தைய நாமங்களில் அம்பிகையினுடைய மனோன்மணீ ரூபம். மந்த்ரம், தந்த்ரம், நிர்குணத்தைப்பற்றி (அருவத்தைப்பற்றி) விரிவாகவே பார்த்தோம். பின்னர், சகுணத்திற்கு வந்து (உருவத்திற்கு வந்து), யோக விஷயமாக வந்து மனோன்மணீ ரூபமாக பார்த்தோம்.
நிர்குணத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லையென்றால், பௌத்தம் போன்று சூன்ய வாதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால்தான், நமது ஆச்சார்யார்கள், பிரம்மத்தை நிர்குணமாக சொன்னாலும் கூட ஒரு கையில் நிர்குணத்தை பிடித்துக்கொண்டே, சகுணத்தையும் விடாமல் இருந்தார்கள். கோயில், பூஜை என்று எல்லாவற்றிற்குமே முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
நிர்குணம் என்பதற்கு எதுவுமே இல்லை என்று பொருள் இல்லை. அங்கு எல்லையே இல்லை என்பதுதான் பொருள். விரிந்து விரிந்து இருக்கிறது. பௌத்தம் சூன்யம் என்பதை நாம் பிரம்மம் என்றும் ஷிவம் என்றும் சொல்கிறோம். மங்களகரமானது. விஷ்ணு மயம் ஜகத் என்று சொல்கிறோம். சூன்யமே கூட பிரம்மத்தின் ஒரு பகுதி என்று சொல்லி விட்டோம். நாம் எதையும் மறுக்கவில்லை. நாம் இருக்கிறது என்றுதான் சொல்கிறோம். எனவே, நிர்குணம் என்பதை எல்லாவற்றையுமே தன்னிடத்தில் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதைக் காண்பிப்பதற்காகவே நிர்குணத்தை சொல்லி முடித்தவர்கள், அடுத்து வரும் நாமங்களில் மஹா ரூபா, மஹா பூஜா… என்று எல்லாமே பெரியது எனும்படியாக மஹா… மஹா… என்று வர்ணித்துக் கொண்டே வருகிறார்கள்.
ஔவையார் பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரியது பெரியது புவனம் பெரியது
– என்று கேட்டுக் கொண்டே வந்து,
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!
பாரதியார் கூட, பெரிதினும் பெரிது கேள் என்கிறார்.
அதேபோல் அம்பாள், லலிதா என்பதெல்லாம் நாம் நினைப்பதை விட பெரிதாகும் என்பதை காட்டவே மஹா… என்கிற வார்த்தையை இந்த நாமத்தின் முன் கொண்டு வர்ணிக்கின்றனர்.
212. மஹா ரூபா – நாம ரூப பிரபஞ்சமாக எவள் இருக்கிறாளோ அவளே இதை இயக்கிக் கொண்டிருக்கிறாள். அதைக் கடந்து போக வேண்டுமென்றால் அம்பாளிடம் சரணாகதி அடைய வேண்டுமென்று பார்த்தோம். நம்முடைய ரூபத்தை தொடங்கி, நாம் பார்க்கும் எல்லாமே அவள்தான். ஏற்கனவே, சப்தப் பிரபஞ்சம், அர்த்த பிரபஞ்சம் என்றெல்லாமும் பார்த்தோம். இப்படி எல்லா ரூபங்களுமாக இருப்பதால் அவளை மஹா ரூபா என்று அழைக்கிறோம்.
213. மஹா பூஜ்யா – எல்லோராலும் வணங்கக் கூடியவர்களை பூஜ்யர்கள் என்று சொல்வோம். பூஜ்ய ஸ்ரீ , பரம பூஜ்ய ஸ்ரீ என்றெல்லாம் சொல்வோம். அவர்கள் ஒரு உயர்ந்த நிலையிலிருப்பதாலும், எல்லோராலும் வணங்கத் தக்கவர்களாக இருப்பதாலும் சொல்கிறோம். விநாயகர், முருகன், ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்று எல்லோரையும் வணங்குகிறோம். ஆனால், இவர்கள் அனைவரும்போய் யாரை வணங்குகிறார்கள் எனில், சாட்சாத் பரப்பிரம்ம சொரூபிணியாக இருக்கக் கூடிய லலிதா மஹா திரிபுரசுந்தரியைத்தான் வணங்குகிறார்கள். இப்படி எல்லாரும் வணங்கக் கூடிய பூஜ்யர்களால் வணங்கப்படுபவளாக இருப்பதால் அவள் மஹா பூஜ்யா என்றழைக்கப்படுகிறாள்.
214. மஹா பாதக நாசிநீ – இந்த நாமம் முக்கியமானது. பாதகம், இந்த பாபம் இவையெல்லாம் கர்மாவினால் வருவது. இதனால்தான் பிறப்பு இறப்பு. இந்த சுழற்சியை நிறுத்தக் கூடிய வல்லமை அவளிடம்தான் இருக்கிறது. எது இதற்கெல்லாம் காரணமாக இருக்கிறதோ அந்த பாதகத்தை அழிக்கக் கூடிய சக்தி அவளிடம் மட்டும்தான் இருக்கிறது.
இன்னொரு அர்த்தமும் உண்டு.
இருப்பதிலேயே பெரிய பாதகம் செய்தவன் அம்பிகையை சரணடைந்தால் அந்த பாதகத்தை அழித்து விடுவாள். நம்முடைய சாஸ்திரம் என்ன சொல்கிறதெனில், குருவிற்கு மட்டுமே இந்தச் சக்தியுள்ளதாக சொல்கிறது. ஏனெனில், குரு ரூபமாக அம்பாள்தான் அங்கு செயல்படுகிறாள். இப்படி பிறப்பு இறப்பு என்கிற சுழற்சியை அறுப்பதால் மஹா பாதக நாசிநீ என்று பெயர்.
215. மஹா மாயா – எப்படி இந்த கர்ம வினையை அறுக்கின்ற சக்தியோடு இருக்கிறாளோ, அதேபோன்று இந்த கர்ம சுழற்சியையும் அவளே கையாளுகிறாள். ஏனெனில், இந்த கர்ம வினையின் சுழற்சி என்பது எங்கு யாரோடு யாரை இணைப்பது என்று தொடங்கி, சேர்க்க முடியாத விஷயங்களையெல்லாம் சேர்த்து அவள் பெரிய பிரபஞ்ச விளையாட்டை விளையாடுகிறாள். நம்மால் முற்றிலும் இது புரிந்து கொள்ள முடியாதபடிக்கு உள்ளது. இப்படி ஒரு பக்கம் பிரபஞ்சத்தை அறுத்து, முக்தியை அளிக்கிறாள். அதேபோன்று இப்படிப் பிரபஞ்ச விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கும் மாஹா மாயையாக திகழ்கிறாள்.
216. மஹா ஸத்வா – இதை எல்லாவற்றையும் செய்தாலும் கூட சுத்த சத்வ நிலையில் இருக்கிறாள். மஹா பாதக நாசிநீ என்று கர்ம வினைகளை அறுக்கிறாள். மஹா மாயா எனும்போது எல்லாவற்றையும் இயங்க வைக்கிறாள். செயல்பாட்டை நிறுத்தவும் செய்கிறாள். செயல்படுவது நிறுத்தப்படும்போது தமோ குணத்திற்கு போகிறோம். மீண்டும் செயல் தொடங்கும்போது ரஜோ குணத்திற்கு வருகிறோம். இப்படி நிறுத்துவதால் அவள் தமோ குணத்திற்கும் போவது கிடையாது. செயல்படுவதால் அவள் ரஜோ குணத்திற்கும் போவது கிடையாது. சத்வம், ரஜஸ், தமம் என்கிற மூன்று நிலைகளையும் கடந்து, சுத்த சத்வ நிலையில் இருப்பதால் அவள் மஹா ஸத்வா என்று வர்ணிக்கப்படுகிறாள்.
217. மஹா சக்திர் – இப்படி மஹா சத்வா என்கிற நிலையில் இருப்பதாலேயே அவள் மஹா சக்தியாக இருக்கிறாள். நாம் இந்த ரஜோ, தமோ குணங்களுக்குள் இருக்கும்போது ஒரு சமயம் சக்தி வரும். இன்னொரு சமயம் சக்தி போய் விடும். இந்த இரண்டையும் சரிசமமாக வைத்துக் கொண்டால் சத்வ குணத்தில் இருப்போம். ஆனால், அம்பாள் இந்த குணங்களையெல்லாம் கடந்து சுத்த சத்வ நிலையில் இருப்பதால், அவளுக்கு மகாசக்தி என்று பெயர். அவள் சக்தியில் கூடுவதோ குறைவோ என்று எதுவும் கிடையாது.
218. மஹா ரதி – ரதி என்றால் ஆனந்தம். சந்தோஷம் என்று அர்த்தம். மஹா பாதக நாசம் எதற்கு செய்ய வேண்டும். மகா மாயா சொரூபமாகவும் மற்றும் மஹா சத்வ நிலையில் ஏன் இருக்க வேண்டும். இதெல்லாம் அவளுடைய குழந்தைகளான, பக்தர்களான நமக்கு ஆனந்தத்தை தருவதற்கு. ரதி என்றால் ஆனந்தம். சுகம் என்று அர்த்தம். அந்த மஹா ரதி என்று நமக்கு ஆனந்தத்தை தரக் கூடியவளாக அவள் இருக்கிறாள். அதனாலேயே அவளுக்கு மஹா ரதி என்று பெயர்.
219. மஹா போகா – இந்த ஆனந்தத்தை கொடுத்தால் போதுமா? அந்த ஆனந்தத்தை அனுபவிக்கச் செய்ய வேண்டுமல்லவா. இது சாதாரண சரீரத்திலிருந்து வரும் சந்தோஷம் அல்ல. உண்மையான ஸ்வரூபத்திலிருந்து வரும் நிஜானந்தம். மஹா ரதி என்று அந்த ஆனந்தத்தை காண்பித்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதை நம்மை அனுபவிக்கச் செய்பவளாகவும் இருப்பதால் மஹா போகா என்று பெயர். ஒரு அம்மா சாப்பாட்டை தயார் செய்வது மட்டுமல்ல, அதை ஊட்டிவிடச் செய்யும் ஆனந்தத்தை, அனுபவிக்கச் செய்வதும் அவளேதான்.
220. மஹைச்வர்யா – ஐஸ்வர்யம் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. வெளிப்படையாக உலகியல் அர்த்தத்தில் செல்வம் என்று பெயர். மஹைச்வர்யம் என்றால் மிகப் பெரிய செல்வத்திற்கு அதிபதியாக இருக்கிறாள். பக்தர்கள் என்ன கேட்டாலும் அவளால் தரமுடியும். இன்னொரு அர்த்தம். சித்திகள் ஆகும். அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்று அஷ்டமா சித்திகளையும் சொல்வார்கள். இப்படி எட்டை சொல்வதால் சித்திகள் எட்டு மட்டும்தான் என்றும் சொல்ல முடியாது. இந்த எட்டு வகைகளுக்குள் (sub divitions) பகுதி பகுதியாக பற்பல சித்திகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் அவளுடைய குழந்தைகளுக்கு, பக்தர்களுக்கு தேவைப்படும் போது சித்திகளை கொடுப்பாள். உபயோகப்படுத்துவாள். அம்பாள் சொரூபமாகவே இருக்கின்ற மகான்கள் ஞானிகளெல்லாம் ஏன் அற்புதம் செய்கிறார்களெனில், அவர்கள் சாட்சாத் அம்பாளாகவே இருப்பதால் இந்த சித்திகளெல்லாம் அவர்களுக்கு சுபாவம் ஆகிவிடும். பாபா போன்ற மகான்களின் சரிதத்தை பார்க்கும்போது ஏன் அற்புதங்கள் நடக்கின்றது எனில், அங்கு அது அவளுடைய சுபாவமாக இருக்கிறது. இதனாலேயே அம்பிகைக்கு மஹைச்வர்யா அல்லது மஹைஸ்வர்யா என்று பெயர்.
221. மஹா வீர்யா – இந்த அற்புதங்களை எல்லாம் செய்யக்கூடிய வல்லமை பெற்றிருப்பதாலும், தன்னுடைய பக்தர்கள் கேட்கக் கூடிய வரங்களையெல்லாம் உடனே தரக் கூடியதாலும், அவளுக்கு மஹாவீர்யா என்று பெயர். நம்மிடம் ஒன்றை கேட்டு இன்னொருவர் பெற்றுக் கொண்டால், நம்மிடம் அந்தப் பொருள் குறைந்து விடும். ஆனால், எது கேட்டாலும் அவள் குறைவற்று கொடுத்துக் கொண்டிருப்பதால் அவள் மஹா வீர்யா என்று அழைக்கப்படுகிறாள்.
222. மஹாபலா – இப்படி பிரபஞ்சத்தில் கொடுத்துக் கொண்டே இருக்கிறோமே என்கிற சலிப்பு கிடையாது. இந்த பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறோமே என்கிற சலிப்பு கிடையாது. ஆங்கிலத்தில் graceful என்றொரு வார்த்தை உண்டு. மிகவும் அநாயாசமாக செய்து கொண்டே இருக்கிறாள். அவளுடைய பலம் என்றும் குறைவதே கிடையாது. அதனால், அவளுக்கு மஹா பலா என்று பெயர்.
(சுழலும்…)

Related Stories: