பாசத்தோடு காப்பாள் பகவதி அம்மன்

‘‘அம்மா, தாயே, பகவதி..!’’ என்று பெரியவர்கள் நிம்மதிக் குரல் கொடுக்கிறார்கள் என்றால், அவர்கள், அப்போதைக்கு மன நிறைவாக முடிந்திருந்த ஒரு விஷயத்துக்காக அம்பிகைக்கு நன்றி சொல்கிறார்கள் என்று அர்த்தம். அல்லது தான் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சி சிறப்புற நிறைவேற வேண்டும், அதற்கு அன்னையின் துணை வேண்டும் என்று கோரும் விண்ணப்பமாகவும் இருக்கலாம்.

கருணை, ஞானம், செல்வம், தலைமைப் பண்பு, பேரொளி, வீரம் ஆகிய குணங்களைக் கொண்டு அருள்பவர்தான் பகவான் என்பார்கள். அந்த வகையில் அதே குணங்களோடு மக்களை பரிபாலிப்பவள்தான் பகவதி.கேரள மாநிலத்தை கடவுள் பூமி என்று சொல்வதுண்டு. இங்கே எண்ணிலடங்கா கோயில்கள் உள்ளன. மஹாவிஷ்ணு மற்றும் மஹேஸ்வரனுக்குரிய கோயில்கள் மட்டுமன்றி, அம்பிகைக்கு என்றே பிரத்யேகமாகப் பல கோயில்கள் உள்ளன. அந்த அம்பிகைகள் எல்லோரையும் ‘பகவதி’ என்றே அழைத்து பக்தர்கள் பரவசமடைகிறார்கள்.

கேரளத்தின் புராதன நம்பிக்கைகளில் ‘தாந்திரீகமும் மற்றும் மாந்திரீகமும்’ இடம் பெற்றிருக்கின்றன. பொதுவாக ஒருவரைப் பீடித்திருக்கும் அமானுஷ்ய சிக்கல்களிலிருந்து அவரை விடுவிக்கும் நல்லெண்ணத்தோடு அந்த சம்பிரதாயங்கள் இன்றளவும் அங்கே பழக்கத்தில் உள்ளன. இவற்றில் பகவதி மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரயோகத்தில் பகவதி என்ற பத்ரகாளியின் அருள் வேண்டப்படுகிறது.

மந்திரங்கள் மட்டுமல்லாது பகவதி யந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் அமானுஷ்ய தீய சக்தியால் வசியம் செய்யப்பட்டிருத்தல், அராஜக எதிரியின் தொல்லை மற்றும் ‘பில்லி, சூனியம்’ போன்ற எதிர்மறை விளைவுகள் ஆகியவற்றிலிருந்து மலையாள பகவதி மந்திரங்களும், யந்திரங்களும் விடுதலை அளிக்கின்றன. இந்தத் தகவலின்படி, கேரள மாந்திரீகப் பாரம்பரியத்தில், பகவதி மந்திரம் தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

ஆதிபராசக்தியின் பலவகை அவதாரங்கள் மற்றும் காளிதேவியின் வடிவங்களை வைத்தே இது போன்ற வழிபாட்டை நடத்துகிறார்கள். குறிப்பிட்டுச் சொல்வதானால், மலையாள புராதன மரபுப்படி, அந்த மாநிலத்தின் மாந்திரீகக் கிரியைகளின் போது அந்த வடிவங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுகிறது.ஆதிசக்தியின் இருநிலை குணங்களைக் குறிக்கும் வடிவங்களில் கேரள மாநிலத்தில் பகவதி அம்மன் காட்சி தருகிறாள். உக்கிர ரூபமான துர்க்கை மற்றும் சாந்தமான லட்சுமி, சரஸ்வதி ஆகிய உருவங்களில் பகவதி போற்றப்பட்டு வழிபடப்படுகிறாள். பொதுவாக மன நிம்மதி, நோய் நீங்குதல் மற்றும் செல்வ வளம் சேருதல் என்று பக்தர்களுக்கு, அவரவர் தகுதிக்கேற்ப அருள்பாலிக்கிறாள்.

பொதுவாகவே உக்கிர சொரூபியாகவே வர்ணிக்கப்படும் பகவதி அம்மனை ஆதிசங்கரர் சாந்தப்படுத்தி, மக்களுக்கு நன்மை புரியும் பாசமிகு தாயாக மாற்றினார் என்கிறது ஆன்மிக வரலாறு. தன் கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து மதுரையை எரித்து, பழி தீர்த்துக் கொண்ட கண்ணகி, அங்கிருந்து புறப்பட்டு கேரள மாநிலம் வந்ததாகவும், அங்கே பகவதியாக பல தலங்களில் கோயில்கள் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அநியாயத்துக்கு ஆதரவளிப்போரை அழித்துவிடும் கோப குணம் கொண்ட கண்ணகி, பகவதியாக வழிபடப்படும்போது அதே உக்கிரத்தைத் தன் பக்தர்கள் மீது காட்டிவிடக் கூடாதே என்ற இரக்க உணர்வாலேயே அம்மனை ஆதிசங்கரர் சாந்தப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

உதாரணமாக கேரள மாநிலம் கொடுங்கலூரில் உள்ள பகவதி அம்மன் மிகவும் ருத்ர மூர்த்தியாகவே விளங்கினாள். அவளை தரிசிக்க வரும் பக்தர்கள் மனதில், அக்கிரமத்துக்கு எதிரான அனலை வளர்த்தாள். இது அதர்மத்துக்கு விடும் சவால்தான் என்றாலும், பக்தர்கள், தம் சுயநலத்திற்கும் அந்த உணர்வைப் பயன்படுத்திக் கொண்டபோதுதான் விபரீதமாகி விட்டது.

இந்தச் சூழலை மாற்ற, ஆதிசங்கரர் இந்தத் தலத்துக்கு வந்து,ஸ்ரீ சக்ரம் யந்திரத்தை பிரதிஷ்டை செய்து, பகவதியின் உக்கிரத்தை அந்த யந்திரம் கிரகித்துக் கொள்ளுமாறு செய்து சாந்தப்படுத்தினார். இவ்வாறு கோப நிலையில் உள்ள பகவதி அம்மன், ஏற்கெனவே தமது தாந்திரீக, மாந்திரீக வித்தைகளில் வல்லவர்களுக்கு அருள்புரிந்து விடக் கூடாதே என்பது அவருடைய ஆதங்கமாக இருந்திருக்கலாம். இதேபோல சோட்டாணிக்கரை பகவதி அம்மன் திருக்கோயிலையும் அவரே ஸ்தாபித்தார் என்று சொல்லப்படுகிறது.

நாராயணனாகிய மஹா விஷ்ணுவை வழிபடும் போதும் பகவதி அம்மனையே உருவகித்து பக்தர்கள் பாடி துதிப்பதை, சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலில் காண முடியும்.

‘‘அம்மே நாராயணா, தேவி நாராயணா,
லக்ஷ்மி நாராயணா, பத்ரே நாராயணா’’

– என்ற பகவதி அம்மன் துதியில்ஸ்ரீ மந் நாராயணனை அம்பிகையாகவே வர்ணித்துப் போற்றுவதை கவனிக்கலாம். அதாவது, உலகளந்த உத்தமனின் பராக்கிரமத்தைத் தானும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மன், பகவதி என்று புரிந்து கொள்ளலாம்.

இப்போது அத்தகைய, புராதனமான பகவதி கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், வடக்கன்தரை என்ற தலத்தில் அமைந்துள்ளது பழமை பெருமை கொண்ட பகவதி அம்மன் திருக்கோயில். இங்கே தினமும் தோற்றப் பாடல் ஒன்று பாடப்படுகிறது. இது, கண்ணகியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக மாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் சித்திரை மாத புனர்பூச நட்சத்திர தினத்தன்று நடைபெறும் திருவிழாவிலும் கட்டாயம் பாடப்படுகிறது. விழா தொடக்க நாளன்று, இந்தப் பாடலை பயிற்சியாக மேற்கொண்டு, கற்றுத் தேர்ந்த, குரல் வளம் மிக்க பக்தர்கள் பாடுவதைக் கேட்டால் மெய்சிலிர்க்கும். இந்தப் பாடலைக் கேட்போரின் அனைத்துப் பாவங்களும் தொலையும், அவர்கள் வறுமை ஒழியும் என்பது நம்பிக்கை.

இங்கே ‘வேலைத் திருவிழா’ (வேலா திருவிழா என்றும் சொல்கிறார்கள்) என்ற நிகழ்ச்சி வெகு விமரிசையாக மேற்கொள்ளப்படுகிறது. இதன் தனிச் சிறப்பே, இந்த நிகழ்ச்சியில் அனைத்து மதத்தவரும் கலந்து கொள்வதுதான். அதோடு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த கொண்டாட்டம். ஆனால், இந்த கால இடைவெளிக்குள் பக்தர்களிடையே சமத்துவ உணர்வு கொஞ்சமும் குன்றாமல் இருப்பதுதான் அதிசயம். எந்தவகைத் தூண்டுதலாலும் தாம் மாற்று சமயத்தவர் என்ற எண்ணம் கொள்ளாத வகையில் திட சித்தத்தோடு அடுத்த விழாவிலும் அதே எண்ணிக்கையில், ஏன் அதிகமாகக் கூட கலந்து கொண்டு பகவதி அம்மனின் அருளைப் பெறுகிறார்கள், சர்வமத பக்தர்கள். அம்மைதான் இவர்களுடைய ஒற்றுமையைக் கட்டிக் காக்கிறாள் என்றும் சொல்லலாம்!

இந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகள், அம்மன் விக்கிரகத்தைப் பெருமையுடன் சுமந்து கொண்டு ஊர்வலமாக வரும். திமிலை, மத்தளம், இடக்கை (உடுக்கை), இளதாளம் (ஜால்ரா) மற்றும் கொம்பு ஆகிய பஞ்ச வாத்தியங்கள் முழங்க அந்த யானைகள் கம்பீர நடை போடுவதைப் பார்க்கக் கண் கொள்ளாது. ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த ஐந்து இசைக் கருவிகளையும் இயக்கியபடி உடன் வருவார்கள். கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்விப்பார்கள். விவசாயிகள் தம் அறுவடைப் பலனில் சிறிதளவு எடுத்து வந்து பகவதி அம்மனுக்குக் காணிக்கையாக சமர்ப்பிப்பார்கள்.

இந்தத் திருவிழாவில் ‘கும்மாட்டி பிரார்த்தனை’ குறிப்பிடத்தகுந்தது. அதாவது, பகவதி மற்றும் பூத கணங்களைப் போல வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி. தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் பலவித தெய்வத் திருவுருவங்களைப் புனைந்து கொண்டு பக்தர்கள் வருவார்களே, அதுமாதிரி!

‘ரத்த புஷ்பாஞ்சலி’ என்பது இக்கோயிலில் மேற்கொள்ளப்படும் ஒரு வழிபாட்டு முறை. நோயாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ பெண் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால், இந்த பூஜையை மேற்கொண்டு பகவதி அருளால் குழந்தை பிழைத்தெழும் அனுகூலத்தைப் பெற்றோர் பெறுகிறார்கள். இது தெய்வாதீனத்தால், மேற்கொள்ளும் சிகிச்சையால் குழந்தை நல்ல முன்னேற்றம் காண்பதாகவும் அமைகிறது. அதேபோல அந்தப் பெண் குழந்தைகளின் கல்வி ஆற்றல் வளர்வது முதல், எதிர்காலத்தில் நல்ல குணவானான கணவன் அமைவது வரையில் நீடித்த, வாழ்நாள் பலன் அளிக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

அது என்ன ரத்த புஷ்பாஞ்சலி?

‘ரத்தம்’ என்றால் அப்படியே அர்த்தம் பண்ணிக் கொள்ளாமல் அதன் நிறத்தை – சிவப்பு – கருத்தில் கொள்ள வேண்டும். சிவப்பு நிற செம்பருத்திப் பூ மற்றும் காட்டுத் தக்காளிப் பூ எனப்படும் தெச்சிப்பூ ஆகியவற்றால் இந்த பூஜை செய்யப்படுகிறது. மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்த திரவம் ஒரு கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும். அந்தக் கலவை ரத்தச் சிவப்பு நிறம் கொண்டிருக்கும். இந்தக் குழம்பில், சிவப்பு வண்ணப் பூவை ஒவ்வொன்றாக முக்கி, பகவதி மந்திரங்களை உச்சரித்தபடியே அம்மனின் பாதங்களில் பூசாரிகள் சமர்ப்பிக்கிறார்கள்.

இதுவே ரத்த புஷ்பாஞ்சலி. தம்மைப் பீடித்திருக்கும் பில்லி – சூனியம் போன்ற தீய சக்திகள் விலக, எதிரிகளின் நேரடி மற்றும் மறைமுகத் தொந்தரவுகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட இந்த பூஜையை பக்தர்கள் மேற்கொள்கிறார்கள். பல கால சிகிச்சைக்குப் பிறகும், தீராத நோய்கள் குணமாவதும், மன உறுதி மேம்படுவதும், விரும்பிய ஆக்கபூர்வமான செயல்கள் தடை ஏதுமின்றி நிறைவேறுவதும், இந்த பூஜையின் கூடுதல் பலன்கள்.

கண்ணகியின் தெய்வீகத் தோற்றம்தான் பகவதி அம்மன் என்பதால், இந்தக் கோயிலில் முல்லைப்பூ மற்றும் குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படுவது இல்லை. இந்தக் கோயிலின் சிறப்பு நிவேதனம் – இரட்டி மதுரம் என்ற பாயசம். வழக்கமான பாயசத்தைவிட இரண்டு மடங்கு இனிப்பு சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. பக்தர்கள் தம் ஜென்ம நட்சத்திர நாளன்று பகவதி அம்மனுக்கு இந்தப் பாயசத்தை நிவேதனம் செய்து, கூடியிருக்கும் பக்தர்களுக்கு விநியோகம் செய்து, தம் வீட்டிற்கும் எடுத்துச் செல்கிறார்கள்.

இதனால் வாழ்க்கையில் எந்தப் பிரச்னையும் வராது என்றும் அப்படியே வந்தாலும் அது வெகு எளிதாகத் தீர்வாகி விடுவதாகவும் அனுபவப்பட்ட பக்தர்கள் சொல்கிறார்கள். பாவங்கள் தொலையவும், நிரந்தர மன அமைதி பெறவும், எத்தகைய எதிரியும் காணாமல் போகவும், நீடித்த ஆரோக்கியமான வாழ்வு பெறவும், பகவதி அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

ப்ரபுசங்கர்

 

Related Stories: