உண்மை உங்களை காக்கும்!

மாலை சூரியன் மெதுவாக மறைந்து கொண்டிருந்தது. அந்த நகரத்தின் சத்தம் குறைந்து, வீடுகள் அமைதிக்குள் மூழ்கிக் கொண்டிருந்தன. ஆனால், அந்த அமைதிக்குள், அருணின் உள்ளம் மட்டும் ஓயாமல் கலங்கிக் கொண்டிருந்தது. அவன் கையில் இருந்த சிறிய காகிதத்தை பலமுறை மடித்தும் திறந்தும் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஒரு சாதாரண காகிதம் இல்லை. அதில் அவன் வாழ்க்கையை மாற்றக்கூடிய உண்மை மறைந்திருந்தது.
அந்த அறிக்கையில் இருந்த வார்த்தைகள் அவனை விடவில்லை. “தொற்று… பரவும் வாய்ப்பு அதிகம்…” என்ற எழுத்துக்கள் அவன் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. அவன் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு ஆழமாக மூச்சை விட்டான். “இது பெரிய விஷயம் இல்லை… கொஞ்ச நாள் கவனமா இருந்தா சரியாகிடும்…” என்று அவன் தன்னைத்தானே சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் உள்ளுக்குள் பயம் பெருகிக் கொண்டே இருந்தது.
வீட்டுக்குள் அவன் நுழைந்தவுடன், அவன் அம்மா சிரித்தபடி அவனை வரவேற்றாள். “இவ்வளவு லேட் ஏன்?” என்ற அவளின் சாமான்யமான கேள்விகூட அவனுக்கு கனமாகத் தோன்றியது. அவன் முகத்தில் ஒரு போலி சிரிப்பை வரவழைத்து, “வேலைதான் அம்மா…” என்று சொன்னான். அந்த ஒரு பொய், அவன் மனசை இன்னும் சுருங்க வைத்தது.
அடுத்த சில நாட்களில், அருண் தன்னையே தனிமைப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தான். குடும்பத்துடன் இருந்தாலும், அவர்களிடமிருந்து தூரம் வைத்துக் கொண்டான். இரவு நேரங்களில் மட்டும் அவன் மருந்துகளை எடுத்து குடித்தான். ஒவ்வொருமுறை மருந்தை எடுக்கும் போதும், “இதை நான் ஏன் மறைக்கிறேன்?” என்ற கேள்வி அவனை துரத்தியது. ஆனால், பதில் சொல்லத் தைரியம் இல்லை.
ஒரு நாள் காலை, அவன் திடீரென்று பலவீனமாக உணர்ந்தான். தலை சுழன்று, கண்கள் இருட்டாகின. சில நொடிகளில் அவன் தரையில் விழுந்தான். வீடு முழுவதும் பதற்றம் பரவியது. அவனை உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். அவன் அம்மாவின் குரல் நடுங்கியது; அவள் கண்களில் பயம் தெளிவாகத் தெரிந்தது.
மருத்துவர் பரிசோதனை செய்து வெளியே வந்தார். “இது திடீர் பிரச்சனை இல்லை… இது முன்பே ஆரம்பித்தது,” என்றார். அந்த ஒரு வரி, குடும்பத்தினரின் உள்ளத்தை உறைய வைத்தது. “அவர் முன்பே அறிந்திருந்தாரா?” என்ற கேள்வி அனைவரின் முகத்திலும் தெரிந்தது.
அந்த நேரத்தில், அருண் மெதுவாக கண்களைத் திறந்தான்.”அம்மா, நீங்க பயந்து விட கூடாது என்ற அக்கறையில்தான் நான் உண்மையை சொல்ல தயங்கிட்டேன்” அந்த ஒப்புதல், அவன் உள்ளத்தில் இருந்த பாரத்தை வெளியில் கொண்டு வந்தது. ஆனால், அது மிகவும் தாமதமாகிவிட்டது.
அந்த அறையில் ஒரு கனமான அமைதி நிலவியது. யாரும் பேசவில்லை. அந்த அமைதி ஒரு உண்மையை சொல்லிக் கொண்டிருந்தது. வியாதியைவிட அதை மறைத்ததுதான் பெரிய விபரீதம். அந்த நாள், அந்த குடும்பம் ஒரு கடினமான பாடத்தை கற்றுக் கொண்டது: உண்மையை மறைப்பது சில நேரம் மனதில் தற்காலிக அமைதியை தரலாம், ஆனால், அதன் விளைவு, வாழ்நாளையே அமைதியாக்கிவிடும்.
இறைமக்களே, மறைப்பது ஒருபோதும் பாதுகாப்பைத தராது. உண்மை சொல்லப்படாமல் இருக்கும்வரை, ஒவ்வொரு நாளும் மனதில் காயமாக பதிந்து, ஒருநாள் வெடித்துவிடும். ஆகையால், பயம் இருந்தாலும் சொல்லுங்கள், நெருக்கடி இருந்தாலும் பகிருங்கள், ஏனெனில் உண்மை பேசப்படும் இடத்தில் தான் குணமடையும் வழியும் தொடங்குகிறது.
“வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்கு வராத மறைபொருளுமில்லை” (லூக்கா 8:17) என இறைவேதம் கூறுகிறது.
எனவே, நம்மில் எவரும் எதையும் மறைக்க முயற்சிக்காதிருங்கள்; உண்மை கசந்தாலும் உங்களை காக்கும் என்பதை மனதில் நிறுத்துங்கள்.
– அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.

Related Stories: