சங்கடங்களை போக்குவார் சண்டிகேஸ்வரர்

ஒரு மனிதன் இறைவனிடம் உண்மையான பக்தி கொண்டிருந்தால், அவன் வணங்கும் அந்த தெய்வம் எப்படி அவனை ஆட்கொள்ளும், எனும் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வே பின் வருவது.
“நாளை இதற்கு ஒரு முடிவு கட்டி விடுகிறேன்” என்று கர்ஜித்தார் அவர். காரணம்… காவிரி பாயும் அன்றைய சோழவள நாட்டில் இருந்த சேய்ஞலூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்தனர் எச்சதத்தன் என்ற அந்தணரும், அவர் மனைவி பவித்திரையும். அவர்களுக்குப் பிறந்த தவப் புதல்வனுக்கு, விசாரசர்மன் எனும் பெயர் சூட்டி, வளர்த்து வந்தனர். ஐந்து வயது இருக்கும் போதே விசாரசர்மன் ஆன்மிகத்திலும், சிவபக்தியிலும் சிறந்து விளங்கினான்.

ஒரு நாள் காலையில், அங்கிருந்த ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தான் விசாரசர்மன். அந்தச் சமயத்தில், எதிரே வந்து கொண்டிருந்த இடையர் ஒருவர் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது, பசு ஒன்று முட்டவந்தது. இதனால், தன் கையிலிருந்த பிரம்பினால் கதறக் கதற பசு ஒன்றினை அடித்துக் கொண்டிருந்தான். இந்தக் கொடூரக் காட்சியினைக் கண்ட விசாரசர்மன் பதறிப்போய் ஓடிச் சென்று, இடையர் கையிலிருந்த பிரம்பினைப் பிடுங்கி தூக்கியெறிந்தான். பின் அவனை நோக்கி, “என்ன காரியம் செய்கிறாய்? ஏன் இந்த வாயில்லா ஜீவனை இப்படி வதைக்கிறாய்? இந்தப் பசுவைத் துன்புறுத்துவது அந்தச் சிவனையே துன்புறுத்துவதற்குச் சமம். உனக்குச் சம்மதமானால், இவைகளை இனிமேல் நானே பராமரித்துக் கொள்கிறேன்.” என்றான்.

இடையரும் எல்லாப் பசுக்களையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டு ஓடியே போய்விட்டான். விதையில்லாமல் செடியும் காரணமில்லாமல் காரியமும் உண்டா என்ன? விசாரசர்மன், இடையராக மாறியதும், ஏதோ ஒரு காரணத்தினால்தான் போலும்! அடுத்த நாள் முதல் எல்லாப் பசுக்களையும் விசாரசர்மன் மெய்க்க ஆரம்பித்தான். அருகில் திருவாய்ப்பாடி எனும் ஊரில் உள்ள மண்ணியாற்றின் கரைக்கு ஓட்டிக் கொண்டு வந்து, ஆற்று நீரில் அவைகளை நன்கு குளிப்பாட்டிய பின், மேயவிடுவான். பின் ஓய்வெடுக்க வைப்பான். மாலையானதும் அவைகளைக் கொண்டுபோய் அவற்றின் உரிமையாளர்களிடம் சேர்ப்பான். அதன் பின், தன் வீட்டிற்கு திரும்புவான். தெய்வாம்சம் கொண்டவனின் பராமரிப்பில், பசுமாடுகள் நன்கு வளர்ந்ததால், நிறையப் பாலையும் சொரிந்தன. எனவே பசுக்களின் சொந்தக்காரர்கள், மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

இது ஒருபுறமிருக்க, விசாரசர்மனின் சிவபக்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. அனுதினமும் பசுக்களை மேயவிட்டபின், ஆற்றின் கரையில் ஒரு மர நிழலில் அமர்ந்து சிறிய சிவலிங்கம் ஒன்றை மணல் மூலமாக அமைத்து, மணலால் கோபுரமும் கட்டி, சுற்றுச் சுவரையும் எழுப்பிவிடுவான். அங்கே இருக்கும் பூச் செடிகளிலிருந்து நிறைய மலர்களையும் கொய்து கொண்டு வந்து, அந்த மணல் லிங்கத்திற்கு அர்ச்சனை செய்வான். மேய்ச்சலில் இருக்கும் ஏதேனும் ஒரு பசுவின் மடியை அவன் தொட, அது நிறைய பாலைச் சுரக்கும். அதனைக் கண்ட மற்ற பசுக்களும் அவ்வாறே செய்யும். கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் எல்லாப் பாலையும் நிரப்பி, அதனை மணல் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வான்.

இதில் என்ன ஒரு அதிசயம் என்றால், மணல் லிங்கம், சிறிதுகூடக் கரையாது. காரணம், அவனிடம் உண்மையான பக்தியும், அர்ப்பணிப்பும் இருந்தது. இறைவன் விரும்புவதும் அது தானே! ஒரு நாள் வழிப்போக்கன் ஒருவன் ஏதோ ஒரு காரியத்துக்காக சேய்ஞலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். விசாரசர்மனை அவன் தாண்டிச் செல்லும் சமயம் திகைத்து நின்றுவிட்டான், நடப்பதைப் பார்த்து! தீவிரமான பூஜை, அதுவும் மணல் லிங்கத்திற்கு, கூடவே பால் அபிஷேகம், அதிலும் கரையாத மணல் லிங்கம், தானாக பால் சுரக்கும் பசுக்கள்.

ஆச்சரியம் அகலாமல் நேரே ஊருக்குள் சென்று, மாடுகளின் உரிமையாளர்களிடம் ஆற்றங்கரையில் நடக்கும் அதிசயத்தைக்கூறி, கூடவே பசுக்களின் அதிகப்படியான பால் கிடைக்காமல் போவதால் உண்டாகும் நஷ்டத்தையும்கூறி, அவர்களை ஆத்திரம் கொள்ளச் செய்தான். பசுக்களின் உரிமையாளர்கள் எல்லோரும் நேராகச் சென்று எச்சதத்தனிடம், “உங்களுக்குத் தெரிந்துதான் உங்கள் பிள்ளை எங்கள் பசுக்களின் பாலை வீணாக்குகிறானா? என்ன பிள்ளையைப் பெற்றெடுத்தீர்? என்ன வளர்த்தீர்? அவனைக் கண்டித்து வையுங்கள். இல்லையெனில் நாங்களே கண்டிப்பதுடன், அவனைத் தண்டிக்கவும் செய்ய வேண்டி வரும்” என்று வசைப்பாடினர்.

“எனக்கும் நீங்கள் கூறிய பின்புதான் விஷயம் தெரியும். நாளையே இதற்கு ஒரு முடிவு கட்டி விடுகிறேன். நீங்கள் கவலைப்படாமல் போங்கள்” என எச்சதத்தன் அவமானம் கலந்த சினத்துடன் கூறினார். வீட்டிற்கு வந்த விசாரசர்மனிடம், எச்சதத்தன் எதுவும் கேட்கவில்லை. வழக்கம் போல் அடுத்த நாள் காலை விசாரசர்மன் பசுக்களை மேய்ப்பதற்கு ஓட்டிக் கொண்டு போனான். எச்சதத்தன், அவனைப் பின் தொடர்ந்தார். விசாரசர்மனின் செயல் களைக் கவனிக்க ஆரம்பித்தார்.

வழக்கம்போல், விசாரசர்மன் மணல் லிங்கத்திற்குப் பூஜை செய்து, பசுக்களின் பால் கொண்டு அபிஷேகமும் செய்தபின், வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பாத்திரங்களில், மற்ற பசுக்களின் பாலை நிரப்பினான். இதனை கண்டு, ரௌத்திரம் தலைக்கேற மரத்தின் மேலிருந்து குதித்த எச்சதத்தன், விசாரசர்மனை தன் மகனென்றும் பாராமல் கையிலிருந்த குச்சியால் மாறிமாறி ஓங்கி அடித்தார். ஆனால், ஈசனை எண்ணிக் கண்மூடி அமர்ந்திருந்த விசாரசர்மனிடம் எந்த எதிர்வினையும் இருக்கவில்லை!

பின் கண் திறந்த விசாரசர்மன், தன் முன் இருக்கும் பால் நிரம்பிய பாத்திரத்தை எடுத்து, மணல் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முற்படவும், திடீரென எச்சதத்தனின் கால் இடறி பால் வைத்திருந்த பாத்திரத்தை எட்டி உதைக்க நேரிட்டது. இதனைப் பொறுக்க முடியாத விசாரசர்மன், அருகில் இருந்த ஒரு கோலை எடுத்து தன் தந்தையின் கால்களை நோக்கி வேகமாக வீசினான். என்ன ஆச்சரியம்! கோல், கோடாரியாக மாறி, எச்சதத்தன் கால்களை பதம் பார்த்தது. எச்சதத்தன், ரத்த வெள்ளத்தில் கிடந்தார். கால்களிரண்டும் துண்டானது. நடந்து முடிந்த இந்த சம்பவம், ஈசன் விருப்பமா அல்லது விளையாட்டா தெரியவில்லை! ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், மீண்டும் தன் பூஜையை தொடர்ந்தான், விசாரசர்மன். விசாரசர்மனின் பக்தியை மெச்சிய ஈசன், அங்கே ஒளி வெள்ளத்தில் தோன்றினார்!

“விசாரசர்மா! என்மேல் நீ கொண்டிருக்கும் பக்தி! என் பொருட்டு உன் தந்தை தன் கால்களை இழந்ததால் இனி, யாமே உனக்குத் தந்தையானோம்! அது மட்டுமல்ல, இன்று முதல் எனக்குச் செய்யப்படும் எல்லா விதமான பூஜைகளும், அர்ச்சனைகளும், அபிஷேகங்களும், வழிபாடுகளும், விழாக்களும், நாம் உண்பன, உடுத்துவன யாவற்றிற்கும் நீயே சொந்தமாவாய்! இனிமேல் நீயும் நானும் வேறுவேறு அல்ல.

நீயே நான், நானே நீ! எனவே, இவற்றையெல்லாம் உள்ளடக்கிய `‘சண்டீசர்’’ என்னும் பதவியையும் உனக்குத் தந்தோம்!” எனக்கூறி, தன் தலையிலிருந்த கொன்றை மலர் மாலையை எடுத்து, விசாரசர்மனின் கழுத்தில் இட, வானத்தில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிய, சிவகணங்கள் ஆடிப்பாட, விசாரசர்மன் “சண்டீசராக” மாறி, பின் “சண்டிகேஸ்வரராகவும்’’ ஆனார். எச்சதத்தன்னின் தவறை மன்னித்து, ஈசன் அவரைத் தன்னிடம் அழைத்துக் கொண்டார். இதுவே, சண்டிகேஸ்வரர் நம்மிடம் வந்த தெய்வீக நிகழ்வு!

இதன் காரணமாகவே எல்லா சிவாலயங்களிலும் ஈசனுக்குச் செய்யப்படும் அபிஷேகப் பொருள்கள் வெளியேறும் இடத்தில், சண்டிகேஸ்வரருக்குத் தனி சந்நதி அமைக்கப்பட்டிருக்கும். ஈசனின் சக்தி முழுவதும் அவருக்குப்போய் சேரும் விதமாக! இவரே ஆலயப் பொருட்களுக்குப் பாதுகாவலர். இறைவனால் ஈசுவர பட்டம் பெற்றவர்.சண்டிகேஸ்வரரை வணங்கும் சமயம், அவர்முன் நின்று கைதட்டுவதோ, சொடக்குப் போடுவதோ, அவர் மேல் நூலைப் போடுவதோ கூடாது. காரணம், கண்களை மூடி ஈசனை நோக்கித் தவம் செய்து கொண்டிருக்கும், அவரின் தவத்தைக் கலைப்பதாகிவிடும்.

அவர் முன்நின்று, நாம் கண்களை மூடி, நம் இரண்டு உள்ளங்கைகளையும் சத்தமில்லாமல் தேய்த்து, ஆலயத்திலிருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை என்று மனதால் உணர்த்தினாலே போதுமானது, சண்டிகேஸ்வரர் அருள் செய்துவிடுவார்.

கோயில் குறிப்பு:

திருவாய்ப்பாடியில்தான், விசாரசர்மன் ஆற்றங்கரையில் மணல் லிங்கத்திற்குப் பூஜை செய்ததாகவும், சண்டிகேஸ்வரர் முக்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவர், பால் அபிஷேகம் செய்து அதனை ஏற்றுக் கொண்டதாலேயே இறைவன் இங்கே `‘பாலுகந்தீஸ்வரர்’’ (பாலுஉகந்தநாதர்) எனப்படுகிறார். இங்கு இருக்கும் இறைவியின் பெயர், `‘பிருகன்நாயகி’’ (பெரிய நாயகி) இங்கே இறைவனுக்கு இடப்பாகத்தில் அர்த்த மண்டபத்தில் ஒன்றும், மற்றொன்று மூலஸ்தானத்தில் இறைவனுக்குப் பக்கத்திலுமாக இரண்டு சண்டிகேஸ்வரரை காணலாம். மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனீஸ்வரன் மற்றும் நடராஜர் ஆகியோரும் அருள்கிறார்கள்.

சிவராத்திரி, பிரதோஷம், திருவாதிரை ஆகிய தினங்களில் பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. பாடல் பெற்ற தலங்களில் நாற்பதாவது தலம் இது! வேண்டும் வரமெல்லாம் தரும் சண்டிகேஸ்வரப் பெருமானை, அவர் அவதரித்த இடத்திலேயே சென்று நம்பிக்கையுடன் வணங்கிவர, எல்லா நலமும் வளமும் பெற்று வாழலாம். குறிப்பாக, வாழ்க்கையிலும் உத்தியோகத்திலும், அவரைப் போலவே பதவி உயர்வுப் பெற்று இன்புற்று வாழலாம்!

திறந்திருக்கும் நேரம்: காலை 7-9, மாலை 5-7. கோயில் தொடர்புக்கு: 9442167104.

அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

பி.ராஜன்

Related Stories: