இந்த வார விசேஷங்கள்

16.5.2026 – சனிஅமாவாசை – கார்த்திகைவிரதம்
சனிக் கிழமையில் வரும் சர்வ அமாவாசை. இன்றைய தினம் முன்னோர்களை நினைத்து பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் செய்வது நல்லது. இது முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் சுபத்தடைகளை நீக்கி சுபகாரியங்களை நிறைவேற்றித் தரும். விபீஷணன், ராமபிரானின் நடையழகை தரிசிக்க விரும்பியதாகவும், அதை ராமபிரான் திருக்கண்ணபுரத்தில் சாதிப்பதாக ஐதீகம் உள்ளது. இந்த நிகழ்வு அமாவாசை தோறும் நடைபெறும். சௌரிராஜப் பெருமாள் கருவறையிலிருந்து மெதுவாக நடந்து விபீஷணன் சந்நதிக்கு வந்து திரும்பி கருவறைக்கு செல்வது நடையழகு தரிசனமாக நடைபெறும். அமாவாசை நாளில் அரசமர வழிபாடு செய்வது நல்லது. பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு சத் சந்தான விருத்தி ஏற்படும். திருமணத்தடைகள் அகலும்.
உணவை தானமாக வழங்குவது மிக உயர்ந்த புண்ணியத்தைத் தரும். சுத்தமான நெய்யை வாங்கி யாருக்காவது தானமாக கொடுக்கலாம். நெய் என்பது தூய்மை மற்றும் தெய்வீகத்துவமானதாகும். கோயில்களுக்கு நெய் வாங்கி தானமாக கொடுப்பது மிக உயர்ந்த தானமாக கருதப்படுகிறது. அமாவாசையோடு இன்று கிருத்திகை விரதம். 27 நட்சத்திரங்களில், கார்த்திகை நட்சத்திரம்முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். சரவணப் பொய்கையில் தாமரை மலரில் மிதந்து வந்த முருகனை ஆறு கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்தனர்.
ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங் களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றதாக கூறுகிறது கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு முருகப் பெருமான் அருளால் நீண்ட ஆயுளும், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நிறைவான அறிவு, நிலையான செல்வம், நல்ல குணமுள்ள பிள்ளைகள் உட்பட பதினாறு பேறுகளும் கிடைக்கும்.
17.5.2026 – ஞாயிறுசிவகாசி விஸ்வநாதர் விழா
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அருள்மிகு விஸ்வநாத சுவாமி – விசாலாட்சி அம்மன் திருக்கோயிலும் திருவிழாக்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை. சிவகாசி என்றாலே பட்டாசுக்கு அடுத்தபடியாக மக்கள் நினைவுக்கு வருவது இந்த ஆலயத்தின் “வைகாசி விசாகத் திருவிழா’’ ஆகும். இந்த விழா வைகாசி மாதத்தில் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். வைகாசி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். பத்து நாட்களும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் (பூத வாகனம், சிம்ம வாகனம், காமதேனு, யானை வாகனம் போன்றவை) வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இன்று பூச் சப்பரத்தில் பவனி.
18.5.2026 – திங்கள்மன்னார்குடி ராஜகோபாலசுவாமி உற்சவம்
திருவாரூர் மாவட்டம் மன்னார் டியில் வீற்றிருக்கும் அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், “தெட்சிண துவாரகை’’ (தென்னிந்தியாவின் துவாரகை) என்று போற்றப்படுகிறது. இங்கு நடைபெறும் உற்சவங்கள் தமிழகத்திலேயே மிக நீண்ட நாட்கள் நடைபெறும் விழாக்களில் ஒன்றாகும். இன்று வைகாசி உற்சவம் துவக்கம்.
19.5.2026 – செவ்வாய்காரைக்குடி கொப்புடைஅம்மன் தேர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் காவல்தெய்வமாக வீற்றிருக்கும் அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. காரைக்குடியின் புறநகரப் பகுதியாக தற்போது இருக்கும் செஞ்சை என்ற இடம் முன்பு காட்டுப்பகுதியாக இருந்தது. இந்த செஞ்சை காட்டுப் பகுதியில் காட்டம்மன் கோயில் உள்ளது. காட்டம்மனும் கொப்புடையம்மனும் சகோதரிகள் ஆவர். காட்டம்மனின் தங்கையே கொப்புடையம்மன். கொப்புடை அம்மன் கோயிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் “செவ்வாய் பெருந்திருவிழா’’ மிக முக்கியமானது. இது வழக்கமாக 10 நாட்கள் நடைபெறும். சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், பொதுவாக 9ம் நாள் (இன்று) நடைபெறும்.
அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேரில் கொப்புடை அம்மன் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வருவார். காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு “ஓம் சக்தி, பராசக்தி’’ என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து இழுப்பார்கள். தேரோட்டத்திற்கு அடுத்த நாள் (10ம் நாள்), அம்மன் கோயிலின் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கித் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.
20.5.2026 – புதன்நம்பியாண்டார் நம்பிகுருபூஜை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பக்கத்தில் உள்ள திருநாரையூர் என்ற ஊரில் சவுந்தரநாதர் என்ற திருக்கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில், 33வது தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு அவதரித்தவர் நம்பியாண்டார் நம்பி. இவருடைய அருஞ்செயலானது தேவாரங்களைத் தொகுத்துக் கொடுத்தது. இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் காட்டுமன்னார் கோயில் உள்ளது. அங்கு அவதரித்தவர் நாதமுனிகள். அவர் ஆழ்வார்கள் பாசுரங்களைத் தொகுத்துக் கொடுத்தார். சைவநூல்களை தொகுத்துக் கொடுத்த நம்பியாண்டார் நம்பியும், வைணவ நூல்களைத் தொகுத்துக் கொடுத்த நாதமுனிகளும் கிட்டத்தட்ட ஒரே ஊரில் அவதரித்தது என்பது அந்த ஊருக்கான சிறப்பு.
21.5.2026 – வியாழன்சேக்கிழார் குருபூஜை
தெய்வச் சேக்கிழார் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர். அறுபத்து மூன்று நாயன் மார்களின் வரலாற்றை விளக்கும் “திருத்தொண்டர் புராணத் தினை” இயற்றியவர். பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே `உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார். தில்லையில் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்திரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. புராணம் பாடி முடிந்ததும், அரசன் அவரைத் தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறிச் சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
உலகிலேயே சேக்கிழாருக்கு இரண்டு கோயில்களில் மட்டுமே தனிச் சந்நதி உண்டு, முதலாவது சேக்கிழார் பிறந்த ஊரான திருக்குன்றத்தூர் சிவன் கோயில், இரண்டாவது தேவகோட்டை நகரச் சிவன் கோயில். வாழ்வாங்கு வாழ்ந்து நிறைவாக சிவ ஜோதியில் கலந்த வைகாசி பூசம் அன்று அவருடைய குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது.
21.5.2026 – வியாழன்நமி நந்தி அடிகள் குரு பூஜை
நமிநந்தியடிகள் நாயனார் சோழ நாட்டு ஏமப் பேரூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர். தினம்தோறும் திருவாரூர்க்குப் சென்று ஈசனைத் போற்றி வணங்கி வருவார். ஒரு நாள் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற ஆசை வந்தது. ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கிற்கு சிறுது நெய் வேண்டினார். ஆனால், அவர்கள் தகாத வார்த்தை சொல்லி கேலி செய்தனர்.
“உன் இறைவன் சக்திவாய்ந்தவன் தானே. நீரால்கூட விளக்கு எரிக்கலாமே’’ என்று சொல்ல, அது கேட்டுப் பொறாத நமிநந்தியடிகள் பெருமான் திருமுன் சென்று வீழ்ந்து வணங்கி பஞ்சாட்சரம் ஓதி குளத்து நீரை அள்ளிக்கொண்டு விளக்கு ஏற்ற, விளக்கு பிரகாசமாக எரிந்தது. கோயில் முழுக்க நீரிலேயே விளக்கு ஏற்றிய அதிசயம் தெரிந்து மக்கள் வியந்தனர். திருவாரூரில் வெகுகாலம் சிவத் தொண்டு புரிந்த அடிகள் வைகாசி மாதம் பூச நட்சத்திரம் அன்று சிவபதம் அடைந்தார். அவர் குருபூஜை நாள் இன்று.
21.5.2026 – வியாழன்திருவாரூர் கமலமுனி சித்தர்
கமலமுனி சித்தர் திருவாரூரிலேயே முக்தியடைந்தவர். திருவாரூர் பெரிய கோயிலின் கட்டுமானப் பணிகளில் கமலமுனி சித்தரின் பங்கு அளப்பரியது என்று ஆன்மிக வரலாறுகள் கூறுகின்றன. குறிப்பாக, அங்குள்ள எந்திரங்கள் மற்றும் சிலைகளை முறைப்படி பிரதிஷ்டை செய்ததில் இவரது பங்களிப்பு உண்டு. மனஅமைதி தேடுபவர்களும், யோகக் கலையில் சிறக்க விரும்புபவர்களும் கமலமுனி சித்தரைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருவாரூர் தியாகராஜர் கோயிலின் உட்பிரகாரத்தில், தியாகராஜர் சந்நதிக்கு அருகிலேயே கமலமுனி சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. மற்ற சித்தர்களைப் போலன்றி, இவர் இறைவனின் கருவறைக்கு அருகிலேயே அமைதியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தியாகராஜரைத் தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்கள், கமலமுனி சித்தரின் சந்நதியிலும் தியானம் செய்து வழிபடுவது வழக்கம்.
22.5.2026 – வெள்ளிசோமாசிமாற நாயனார் குருபூஜை
திருவாரூர் பூந்தோட்டம் அருகே திருவம்பர் என்னும் ஊரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் மாறநாயனார். சோமவேள்வியால் எம்பெருமானை வழிபட்டதால் இவர் சோமாசிமாற நாயனார் என்று அழைக்கப்பட்டார்.
சோமாசிமாற நாயனார். சுந்தரரோடு தோழமை கொண்டு, அவருடைய பரிந்துரையின் பேரில், சிவனை நேரில் அழைத்து, யாகத்தின் அவிர்பாகம் வாங்கிக் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. சுந்தரரின் நட்பைப் பெறுவது எப்படி என்று எண்ணினார். தூது வளைக்கீரையைப் பறித்துவந்து சுத்தம் செய்து சுந்தரருக்கு கொடுத்து சென்றார். அதனால் சுந்தரருக்கு இவர் மீதான அன்பு அதிகரித்தது. ஒருவழியாக சுந்தரரை நட்பாக்கிக் கொண்டார். மெல்ல தம் வேண்டுகோளை சுந்தரரிடம் தெரிவிக்க, முதலில் தயங்கிய சுந்தரர் பிறகு ஏற்றுக் கொண்டார்.
சுந்தரர் வேண்டுகோளை இறைவனிடம் தெரிவிக்க, “சரி, நான் அவிர்பாகம் வாங்கிக் கொள்ளச் செல்வேன். ஆனால் எப்பொழுது, எந்த உருவில் செல்வேன் என்பதைச் சொல்ல முடியாது. அவர் என்னை எந்த உருவில் வந்தாலும் தெரிந்துகொண்டு அவிர்பாகம் தந்தால் நான் வாங்கிக் கொள்கிறேன்” என்று உத்தரவாதம் தந்தார். அவருடைய உத்தரவாதத்தை மாறநாயனாருக்கும் சுந்தரர் தெரிவித்தார்.
சோமாசியாரின் வேள்வியில் வேத விற்பன்னர்கள் சூழ வேள்வி நடத்தும்போது நான்கு நாய்களை கையில் பிடித்தபடி, வேடன் ஒருவன் யாகம் நடத்தும் இடத்துக்குள் நுழைந்தான்.
சோமாசிமாறநாயனார் “வேடன்” தான் “வேதன்” என உணர்ந்து வரவேற்று அவருக்கு வேண்டிய அவிர்பாகத்தை அளித்தார். அடுத்த நொடியில் நாய்கள் நான்கும் சதுர்வேதங்களாக மாற, எம்பெருமான் உமையாளோடு இடப வாகனத்தில் காட்சி தந்து அருளினார். வைகாசி மாதம் ஆயில்யம்நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை.
22.5.2026 – வெள்ளிசஷ்டி விரதம்
இந்த சஷ்டி நாளில் முருகப்பெருமானை நினைத்து உபவாசமிருந்து மாலை செவ்வரளிப்பூக்களால் முருகன் கோயில் சென்று முருகப் பெருமானை வணங்கி கண் குளிர தரிசித்தால், அவர்கள் நினைத்த காரியம் பலிதமாகும். முருகப் பெருமான் செவ்வாய்க்கு உரிய பலன்களான வீடு நிலம் முதலிய யோகங்களைத் தருவார். அதைப் போலவே பெண்களுக்கு நல்ல திருமண வாழ்க்கையைத் தருவார். செவ்வாய் மற்றும் சனி கிரகங்களால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் இன்றைய தினம் இருக்கும் சஷ்டிவிரதத்தால் நீங்கும்.

Related Stories: