இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் அதானி மீதான லஞ்ச புகார்கள் ரத்து: அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் திருப்பம்

வாஷிங்டன்: இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் சுமார் (ரூ.2450கோடி) லஞ்சம் கொடுத்ததாகவும், இது தொடர்பாக அமெரிக்க முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தி நிதி திரட்டியதாகவும் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோர் மீது அமெரிக்க நீதித்துறை கடந்த 2024ம் ஆண்டு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடந்து வருகின்றது.

இதனிடையே அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (எஸ்இசி) தொடர்ந்துள்ள மோசடி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அதானி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு இந்த சட்டப் போராட்டங்களில் தற்போது முக்கிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட வக்கீலான ராபர்ட் ஜே.கியுஃப்ரா ஜூனியர் தலைமையிலான விரிவாக்கப்பட்ட சட்ட குழுவிற்கும், அரசுதரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே பல மாதங்களாக இந்த வழக்கை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

அதானி தரப்பிற்காக ஆஜராகி வழக்கை முன்னெடுத்து செல்வதற்கு அரசு தரப்பிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி சில சான்றுகளை சமர்ப்பித்து அமெரிக்க நீதித்துறையிடம் ராபர்ட் ஜே கியுப்ரா வாதிட்டார். குறிப்பாக, அமெரிக்காவில் அதானி செய்யவிருந்த 10 பில்லியன் டாலர் முதலீடு மற்றும் அதன் மூலம் உருவாக உள்ள 15,000 வேலைவாய்ப்புகள் இந்த வழக்கால் முடங்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் அதானி மீதான கிரிமினல் மோசடி மற்றும் லஞ்ச வழக்குகளை கைவிடுவதற்கு அமெரிக்க நீதித்துறை தற்போது தயாராகி வருகின்றது. மேலும், நீதிமன்ற ஆவணங்களின்படி, சிவில் வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்ளாமலும், மறுக்காமலும் கவுதம் அதானி 6 மில்லியன் அமெரிக்க டாலரும், சாகர் அதானி 12மில்லியன் அமெரிக்க டாலரும் செலுத்தவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனை தவிர ஈரான் மீதான சாத்தியமான தடைகள் மீறல் தொடர்பான கருவூலத் துறையின் விசாரணையும் ஒரு தீர்வை நெருங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தவொரு சமரசத்திலும் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் நிதி அபராதங்கள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வழக்கு தள்ளுபடியானது முழுமையான பாரசபட்சத்துடன் இருக்கும் என்றும் இது வழக்கை மீண்டும் தொடருவதை தடுக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: