பீஜிங்: தைவான் விவகாரத்தை சரியாக கையாளாவிட்டால் அமெரிக்கா-சீனா இடையே போர் கூட ஏற்படலாம் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பில் இருதரப்பு வர்த்தக முரண்பாடு, ஈரான் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடந்தது. உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா-சீனா இடையே நீண்டகாலமாக வர்த்தக போர் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றிருப்பது உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பீஜிங் சென்றடைந்த அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயணத்தின் முக்கிய நிகழ்வான அதிபர் டிரம்ப் – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தை பீஜிங்கில் உள்ள கிரேட் ஹால் ஆப் தி பீப்பிள் எனும் அரசு கட்டிடத்தில் நேற்று நடந்தது. பேச்சுவார்த்தைக்காக வந்த டிரம்பை சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ஜின்பிங் வரவேற்று அழைத்துச் சென்றார். சீன ராணுவ அணிவகுப்பு மரியாதையும், சீன குழந்தைகளின் உற்சாக வரவேற்பும் டிரம்புக்கு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மூடிய கதவுகளுக்கு பின்னால் அதிபர்கள் டிரம்ப்-ஜின்பிங் இடையே சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், வர்த்தக முரண்பாடுகள், ஈரான், உக்ரைன் போர் விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது. அமெரிக்கா-சீனா உறவில் தைவான் விவகாரம் மிக முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது. தீவு நாடான தைவான் தனது பிரிக்க முடியாத பகுதி என சீனா சொந்தம் கொண்டாடுகிறது. தைவானின் இறையாண்மையை பாதுகாப்பதில் அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக அதிபர்கள் டிரம்ப்-ஜின்பிங் சந்திப்பில் பேசப்பட்டதாக சீனா அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தைவான் விவகாரம் சிறப்பாக கையாளப்பட்டால் அமெரிக்கா-சீனா உறவு ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையுடன் இருக்கும், இல்லையென்றால் இரு நாடுகளுக்கும் இடையே மோதலும், போர் கூட ஏற்பட வாய்ப்பிருப்பதாக அதிபர் ஜின்பிங், டிரம்பை எச்சரித்துள்ளார்.
இது ஒட்டுமொத்த உறவையும் பெரும் ஆபத்தில் ஆழ்த்தும் என ஜின்பிங் கூறி உள்ளார். தைவான் விவகாரம் குறித்து பேசப்பட்டதா என செய்தியாளர்கள் அதிபர் டிரம்பிடம் கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார். இதற்கிடையே, சீனாவின் எச்சரிக்கைக்குப் பிறகு தங்களுக்கு ஆதரவு அளித்ததற்காக அமெரிக்காவுக்கு தைவான் நன்றி தெரிவித்துள்ளது. இருதரப்பு சந்திப்பை தொடர்ந்து, அதிபர் டிரம்புக்கு ஜின்பிங் சீன அரசு தரப்பில் இரவு விருந்தளித்தார். இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிபர்கள் டிரம்ப்-ஜின்பிங் பங்கேற்க உள்ளனர்.
