ஹன்டா வைரஸ் பாதித்த பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடம்: தொற்று உறுதி

பாரீஸ்: ஹன்டா வைரசால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எம்.வி.ஹோண்டியாஸ் என்ற சொகுசு கப்பல் தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் இருந்து கடந்த 4ம் தேதி புறப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 150 சுற்றுலா பயணிகள், அன்டார்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே தீவு நாட்டுக்கு பயணித்தனர். மேலும் இந்த கப்பலில் 72 பணியாளர்கள் இருந்தனர். இந்த கப்பல் புறப்பட்ட சில தினங்களிலேயே 3 பயணிகள் ஹன்டா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து நெதர்லாந்தின் டெனரிப் தீவுக்கு கப்பல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் பயணிக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கப்பலில் இருந்து வௌியேற்றப்பட்டு தனி விமானம் மூலம் பாரிசுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 11 பேருக்கு செய்யப்பட்ட சோதனைகளில் 9 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, எம்.வி.ஹாண்டியாஸ் கப்பலில் இருந்து அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வௌியேற்றப்படடு, கப்பல் மீண்டும் நெதர்லாந்து திரும்பியது.

ஹன்டா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “சொகுசு கப்பலில் பயணிகள் அல்லது பணியாளர்களிடையே மட்டும்தான் ஹன்டா வைரஸ் வைரஸ் பாதிப்பு உள்ளது. தற்போது இந்த வைரசால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படும் என்பதற்காக எந்த அறிகுறியும் இல்லை” என்றார்.

* கொரோனா போல் பரவுமா ஹன்டா வைரஸ்?
ஹன்டா வைரஸ் பரவலால் பலருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் அல்லது தாயகம் திருப்பி அனுப்பப்பட்டும் வருகின்றனர்.

இதையடுத்து ஹன்டா வைரஸ் பாதிப்புகளுக்குத் தயாராகுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அனைத்து நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார். இதனால் கொரோனா போல் ஹன்டா வைரஸ் உலகம் முழுவதும் பரவுமா என்ற பீதி எழுந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

* ஹன்டா வைரஸ் என்றால் என்ன?
ஹன்டா வைரஸ் எலியின் சிறுநீரால் பரவும் ஒரு வகை வைரஸ்கள் ஆகும். எலிகளின் சிறுநீர், எச்சம் அல்லது உமிழ்நீருடன் தொடர்பு கொண்ட பிறகு மனிதர்கள் பொதுவாகத் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக காற்றோட்டம் இல்லாத பகுதிகளில் அசுத்தமான துகள்கள் காற்றில் பரவும்போது இது நிகழ்கிறது. அமெரிக்காவில், சில வகை வைரஸ்கள் ஹன்டா வைரஸ் நுரையீரல் நோய்க்குறி எனப்படும் கடுமையான சுவாச நோயை ஏற்படுத்தக்கூடும்.

இது அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. தற்போதைய கவலை, முக்கியமாக தென் அமெரிக்காவில் காணப்படும் ஆண்டிஸ் வகையைச் சுற்றியே உள்ளது. இது அசாதாரணமானது, ஏனெனில் இது மிக நெருங்கிய தொடர்பு நிலைகளில் எப்போதாவது மனிதர்களிடையே பரவக்கூடும்.

* அடுத்த கொரோனாவா?
கொரோனா வைரசை விட ஹன்டா வைரஸ்கள் மிக மெதுவாகவே உருமாறுகின்றன. இந்த வைரஸ் திடீரென அதிக அளவில் பரவக்கூடிய உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருந்த போதிலும் எச்சரிக்கையாக இருக்க உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது. கோவிட்-19 போலல்லாமல், ஹன்டா வைரஸால் காற்றில் பரவும் சமூகப் பரவலைத் தக்கவைக்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே விழிப்புணர்வு அவசியம், ஆனால் பீதி தேவையில்லை என்று பொது சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Related Stories: