சென்னை: முதல்வர் விஜய், தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெண்களுக்கு ரூ.2,500 வழங்காமல் திமுக அரசு வழங்கிய ரூ.1000 மட்டுமே வழங்கியதால் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற திமுக மகளிருக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளுக்குப்பின் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடந்த திமுக அரசு அமல்படுத்தியது. அதன்படி, 1 கோடியே 31 லட்சம் தகுதியுள்ள பெண் பயனாளிகளாக கண்டறியப்பட்டு மாதம் தோறும் 15ம் தேதி அவர்களில் வங்கி கணக்குகளில் தலா ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து குடும்ப பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 உடனடியாக வழங்கப்படும் என்று விஜய் தேர்தலின் போது அறிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 10ம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். பதவியேற்ற பின் முதல் கையெழுத்தே பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக பெண்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அதுபற்றிய எந்த அறிவிப்பும் விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படாததால் பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேநேரம் முதல்வர் விஜய், 2 நாட்களுக்கு முன், ‘பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத்தொகை குறித்து சரி பார்க்க காலஅவகாசம் தேவைப்படுகிறது’ என்று அறிவித்தார். இதற்கு திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் உரிமைத்தொகையை பெண்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தனர்.
அதேநேரம் தமிழக பெண்கள், தாமதமானாலும் விஜய் தேர்தலின்போது அறிவித்தபடி மாதம் ரூ.2,500 கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ரூ.3000 கிடைக்கும் என்று நம்பினர். இந்த நிலையில், மே மாதத்திற்கான பெண்கள் உரிமைத்தொகை திமுக அரசு வழங்கியதுபோன்று 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கும் தலா ரூ.1000 நேற்று வங்கிகளில் திடீரென வரவு வைக்கப்பட்டது. இதை ஒரு சில பெண்கள் வரவேற்றாலும், தேர்தலில் அறிவித்தபடி ரூ.2,500 வழங்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
