இந்தியாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மோடி அரசின் தலைமைத்துவமின்மையே காரணம்…

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். சர்வதேச எரிபொருள் நெருக்கடி ஒரு பக்கம் இருந்தாலும் தலைமைப்பண்பு இல்லாமை, தொலைநோக்குப் பார்வையின்மை மற்றும் திறமையின்மை போன்றவையே நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக எரிபொருள் விலை உயர்வை ஒரு மோடி அரசு உருவாக்கிய நெருக்கடி என்று கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

டீசல் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சாமானிய மக்கள் கடும் பொருளாதார சுமைக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கார்கே சாடி இருக்கிறார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

டீசல் விலை உயரும்போது, ​​அது நாடு முழுவதும் பணவீக்கத்தின் தொடர் விளைவுகளைத் தூண்டிவிடுகிறது. தொழில் துறைகள் முதல் குடும்பங்களின் பட்ஜெட் வரை, விவசாயிகள் வரை—அனைவருமே இதன் பாதகமான விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்கிய போது எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது; அதேவேளையில், காங்கிரஸ் கட்சி எழுப்பிய கேள்விகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை; மாறாக, அமெரிக்காவின் “அனுமதி” மற்றும் “ஒப்புதலுக்கு” நாம் அடிபணிந்ததன் மூலம், நமது தேசிய இறையாண்மையையே நாம் அடகு வைத்துவிட்டோம் என்று குற்றம்சாட்டி உள்ளார். இப்போது நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் வெறும் திசைதிருப்பும் நடவடிக்கைகளையே கையில் எடுத்துள்ளார். உதாரணமாக, “வீட்டிலிருந்தே பணிபுரிவதை” ஆதரிப்பதும், “எரிபொருளைச் சேமியுங்கள்” என்று பெயரளவில் வேண்டுகோள் விடுப்பது போன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொள்கிறார் என்றும் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

Related Stories: