புதுடெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பிய விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த மனுவை டெல்லி ஐகோர்ட் நீதிபதி சுவர்ண காந்த சர்மா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நீதிபதி விலகக் கோரி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
மேலும், நீதிபதியின் வாரணாசி உரை குறித்த எடிட் செய்யப்பட்ட வீடியோ மற்றும் அவருக்கு அரசியல் சார்பு இருப்பதாகச் சமூக வலைதளங்கள் வாயிலாகத் திட்டமிட்ட அவதூறு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், சஞ்சய் சிங், சௌரப் பரத்வாஜ் உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராகக் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நீதிபதி சுவர்ண காந்த சர்மா நேற்று தொடங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘சட்ட ரீதியான தீர்வுகளைத் தேடுவதற்குப் பதிலாக, கெஜ்ரிவால் திட்டமிட்டுத் என் நற்பெயரைக் குலைக்க பிரசாரம் மேற்கொண்டுள்ளார். நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்க முயற்சிப்பதைச் சுதந்திரமான பேச்சு என்ற பெயரில் அனுமதிக்க முடியாது. நான் வழக்கில் இருந்து விலகவில்லை, அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதால் நடுநிலைமை கருதி இந்த வழக்கை வேறு அமர்விற்கு மாற்றுகிறேன்’ என்று தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பாராட்டு தெரிவித்தார். உயர் நீதிமன்ற பெண் நீதிபதி – கெஜ்ரிவால் இடையிலான மோதல் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
