2027ல் 7 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் ஒன்றிய அமைச்சரவை மாற்றம் குறித்து 21ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை?: மூத்த அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்க திட்டம்

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான 3.0 அரசு கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி பதவியேற்றது. இதன் தொடர்ச்சியாக, வரும் 21ம் தேதி ஒன்றிய அமைச்சரவை கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமைச்சகங்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மற்றும் சட்ட மாற்றங்கள் குறித்த செயல்திறன் தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

மேலும், மேற்கு ஆசிய நெருக்கடியால் ஏற்பட்டுள்ள எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்தும் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனைகளை வழங்க உள்ளார். தற்போது அமைச்சரவையில் 72 அமைச்சர்கள் உள்ள நிலையில், அரசியலமைப்பு சட்டப்படி 81 பேர் வரை இடம்பெறலாம் என்பதால் காலியிடங்களை நிரப்பவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அமைச்சரவை மாற்றமானது வரும் ஜூன் 10ம் தேதிக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டில் சமீபத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதில் மேற்குவங்கத்தில் புதியதாக பாஜக ஆட்சியை கைப்பற்றியது. புதுச்சேரி, அசாமில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. எனவே மேற்கண்ட மாநிலங்களை பிரதிநிதிப்படுத்தும் வகையில், அம்மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு ஒன்றிய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 2027ம் ஆண்டில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.

இந்த சட்டசபை தேர்தல்களை கருத்தில் கொண்டு, 50 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் ஒன்றிய அமைச்சரவையில் அதிக பிரதிநிதித்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 65 முதல் 70 வயதுடைய மூத்த அமைச்சர்கள் கட்சிப் பணிகளுக்கு மாற்றப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி இந்தாண்டு தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால், அமைச்சர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர வாய்ப்புள்ளது. கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற புதிய பாஜக தேசிய தலைவரின் கீழ் கட்சி மற்றும் ஆட்சியை ஒருங்கிணைக்க இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Stories: