கோவாவில் நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை : கெஜ்ரிவால் நேரில் ஆறுதல்

பனாஜி: கோவாவில் நீட் தேர்வெழுதிய மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இளநிலை நீட் வினாத்தாள் கசிந்ததால், அந்த நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வை எழுதிய பல லட்சம் தேர்வர்களில், கோவாவைச் சேர்ந்த மாணவர் (17), தேர்வு முடிவுகள் மற்றும் முறைகேடு புகார்களால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். அவர் ேநற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், போட்டித் தேர்வுகளால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாக தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது தெரியவந்தது.

மேலும், அந்த மாணவர் மீது தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற அழுத்தம் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்த தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 2027ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கட்சியை வலுப்படுத்தும் பணிகளுக்காக கோவா சென்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளில் பாஜகவினருக்கு தொடர்பு உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் தான் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடக்கின்றன. இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் அது உண்மைகளை மறைக்கும் செயலாகவே இருக்கும். இதில் பெரிய புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், 3 அல்லது 4 மாதங்களில் குற்றவாளிகள் அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள்’ என்று கூறினார்.

Related Stories: