கோடிக்கணக்கான முதலீடு ஒப்பந்த விவகாரம்; அதானி மீதான லஞ்ச புகார்கள் ரத்து: அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் திருப்பம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதானி குழுமத்தின் மீதான ஊழல் மற்றும் மோசடி வழக்குகளை அந்நாட்டு நீதித்துறை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் அதானி குழும தலைவர் கவுதம் அதானி மீது அமெரிக்காவின் புரூக்ளின் கூட்டாட்சி வழக்கறிஞர்கள் அமைப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதன்படி இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும், இது தொடர்பாக அமெரிக்க முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தி நிதி திரட்டியதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ‘அடிப்படை ஆதாரமற்றவை’ என்றும், அமெரிக்காவின் சட்ட வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும் அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு இந்த சட்டப் போராட்டங்களில் தற்போது முக்கிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட வக்கீலான ராபர்ட் ஜே.கியுஃப்ரா ஜூனியர், இந்த வழக்கில் அதானி தரப்பிற்காக ஆஜராகி போதிய ஆதாரங்கள் இல்லை என 100 பக்க விளக்கங்களை அமெரிக்க நீதித்துறையிடம் அளித்தார்.

குறிப்பாக, அமெரிக்காவில் அதானி செய்யவிருந்த 10 பில்லியன் டாலர் முதலீடு மற்றும் அதன் மூலம் உருவாக உள்ள 15,000 வேலைவாய்ப்புகள் இந்த வழக்கால் முடங்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதன்பின்னர், கிரிமினல் மோசடி மற்றும் லஞ்ச வழக்குகளை வாபஸ் பெற அமெரிக்க நீதித்துறை தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், எஸ்சிஇ சிவில் வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்ளாமலேயே 15 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவும், ஈரான் எரிவாயு கப்பல் போக்குவரத்து தொடர்பான மற்றொரு வழக்கில் அமெரிக்க கருவூலத்திற்கு 275 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கவும் அதானி குழுமம் சம்மதித்துள்ளது.

Related Stories: