லண்டன்: சர்வதேச எரிசக்தி முகமை(ஐஇஏ) வெளியிட்ட தனது மாதாந்திர எண்ணெய் சந்தை அறிக்கையில்,ஈரான் போர் மத்திய கிழக்கு எண்ணெய் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், இந்த ஆண்டு உலகளாவிய எண்ணெய் விநியோகம் மொத்தத் தேவையைப் பூர்த்தி செய்யாது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்த போர், அதைத் தொடர்ந்து ஈரான் மற்றும் அதன் வளைகுடா நாடுகளின் எண்ணெய் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதம், மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது ஆகியவை வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் விநியோக நெருக்கடியை ஏற்படுத்தி, எண்ணெய் விலைகளை கடுமையாக உயர்த்தியுள்ளன.
ஹார்முஸ் சரக்கு போக்குவரத்து இன்னும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வளைகுடா உற்பத்தியாளர்களிடமிருந்து ஏற்படும் ஒட்டுமொத்த விநியோக இழப்புகள் ஏற்கனவே 100 கோடி பீப்பாய்களைத் தாண்டியுள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 1.4 கோடிக்கும் அதிகமான எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இது மிக பெரிய விநியோக அதிர்ச்சியாகும்.
மேற்காசியாவில் போர் நீடிப்பதன் காரணமாக, 2026ம் ஆண்டில் உலகளாவிய எண்ணெய் விநியோகம் ஒரு நாளைக்கு 39 லட்சம் பீப்பாய்களாக குறையும். ஜூன் மாதத்தில் மோதல் முடிவுக்கு வந்தாலும், 2026-ல் மூன்றாம் காலாண்டு இறுதி வரை சந்தையில் கடுமையான விநியோகப் பற்றாக்குறை நீடிக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
* லெபனான் மீது டிரோன் தாக்குதல்: 8 பேர் பலி
லெபனான்-இஸ்ரேல் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இனி அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனில் நடைபெற உள்ளன. இந்த நிலையில், நேற்று பெய்ரூட்டிற்கு அருகே உள்ள ஜியே பகுதியில் இஸ்ரேல் 3 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
