ஆரணி: ஆரணியில் கேட் ஏறி குதித்து ஆசைக்கு இணங்கும்படி பாஜ பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்ததால், இளம்பெண் மாடியில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜ பிரமுகருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு பகுதியை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். திருமணமாகி கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை இவரது கணவர் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் இளம்பெண், வீட்டின் வெளிப்புற கேட்டை பூட்டிவிட்டு மேல்மாடியில் துணி துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது, ஆரணி விடிஎஸ் தெருவை சேர்ந்த பாஜ நகர நிர்வாகியான தர் (33) என்பவர், வீட்டின் வெளிப்புற கேட் மீது எகிறி குதித்து மாடிக்கு சென்று துணி துவைத்துக்கொண்டிருந்த இளம்பெண் அருகே சென்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தரை கண்டித்து எச்சரித்தார். ஆனால் தர், அந்த பெண்ணை தனது ஆசைக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுக்க முயன்றாராம். இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டபடி மேல்மாடியில் இருந்து பால்கனி வழியாக வீட்டின் கீழ் பகுதியில் உள்ள கடைகளின் தகர ஷீட் மீது குதித்தார். இதில் லேசான காயங்களுடன் இளம்பெண் உயிர் தப்பினார். சத்தம் கேட்டு கடைக்காரர்கள், தகர ஷீட்டில் குதித்த இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் நடந்ததை கேட்டறிந்த அவர்கள், வீட்டிற்குள் மதுபோதையில் இருந்த தரை பிடித்து தர்ம அடி கொடுத்து ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில், ஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன், அந்த பெண் கடைக்கு சென்று வரும்போது, தர் வழிமறித்து தகராறு செய்து அத்துமீற முயன்றுள்ளார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது கணவரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதையறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர், தரை கண்டித்தபோது, அவர் மன்னிப்பு கேட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் தர் நேற்றுமுன்தினம் மதுபோதையில் இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தரை கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட தருக்கு ஏற்கனவே திருமணமாகி, அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
