சென்னை: எஸ்டிபிஐ கட்சி தேசிய தலைவர் எம்.கே.பைஸி வெளியிட்ட அறிக்கை: மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முன் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் சுமார் 90 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. மேலும், வாக்குப்பதிவுக்கு முன்பும் பின்னரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வரிசை எண்களில் முரண்பாடுகள் இருந்தது.
குற்றச்சாட்டுகளும் தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து மக்களிடையே சந்தேகத்தை அதிகரித்துள்ளது. தேர்தலுக்கு முன் மூத்த நிர்வாக மற்றும் காவல் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இத்தகைய நடவடிக்கைகள் நிறுவனங்களின் நடுநிலைத்தன்மை மற்றும் தேர்தல் செயல்முறையின் நியாயத்தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அசாமில் நடந்த தேர்தல் பிரசாரங்கள் மத அடிப்படையிலான பிரிவினை மற்றும் அடையாள அரசியலை ஊக்குவித்தது. இதனால் சமூகப் பிளவுகள் தீவிரமடைந்ததுடன் ஆட்சி, மக்கள் நலன் மற்றும் அனைவர் இணைந்த வளர்ச்சி போன்ற முக்கிய பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையையும் இந்த அறிக்கை எடுத்துரைத்துள்ளது. 108 இடங்களை வென்று மிகப்பெரிய தனிக் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க மறுத்தது அரசியல் நோக்கமுடைய அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. இது ஜனநாயக மரபுகளை பாதிக்கிறது.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு மறுக்கப்படுவது, அரசியலமைப்பு பதவியை பயன்படுத்தி ஜனநாயக செயல்முறையை பாதிக்கும் முயற்சியாகும். அனைத்து விவகாரங்களிலும் காலக்கெடுவுடன் கூடிய நியாயமான நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தல்களில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
