சென்னை: கட்சி தாவாமல் இருக்கும் வகையில் தவெக, அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிசார்ட், நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தவெக எம்எல்ஏக்கள் கட்சி தாவாமல் இருக்கவும், குதிரை பேரத்தில் சிக்காமல் இருக்கவும், அனைவரும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல், அதிமுகவில் சில எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்கிற மனநிலையில் இருந்தனர். இதையடுத்து 25க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்களை புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அதிமுக தலைமை தங்க வைத்தது. தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. இதில் 2 எம்எல்ஏக்கள் தவெக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அவர்கள் அணி மாறக்கூடும் என்று தகவல் வெளியானது. இதனால், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணி தாவாமல் இருக்க அவர்களை, காங்கிரஸ் ஆட்சி செய்யும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியது. திமுக 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால், திமுக எம்எல்ஏக்களை பாதுகாக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுக எம்எல்ஏக்கள் வழக்கம் போல் அவரவர் வீடுகளில் தான் உள்ளனர். அந்த அளவுக்கு திமுக எம்எல்ஏக்கள் மீது மு.க.ஸ்டாலின் நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கையை திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் காத்தனர். மு.க.ஸ்டாலின் மீது அந்தளவுக்கு நம்பிக்கையுரியவர்களாக அவர்கள் உள்ளனர். திமுகவில் நிலைமை இப்படி இருக்க, தவெக, அதிமுக, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தங்களது எம்எல்ஏக்களை ரிசார்ட், ஓட்டலில் தங்கவைத்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. எம்எல்ஏக்களை தக்க வைக்க இப்படி அக்கப்போர் பண்ணுகிறார்களே? இவர்கள் ஆட்சி அமைத்து மக்களை எப்படி காப்பார்கள் என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.
