குதிரை பேரத்தில் சிக்குவதை தடுக்க தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெலங்கானாவில் பதுங்கல்: கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை

 

சென்னை: குதிரை பேரத்தில் சிக்குவதை தடுக்க தெலங்கானாவில் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதுங்கியுள்ளனர். அவர்களின் செல்போன்களை அணைத்து வைக்க கட்சி தலைமை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றுள்ளது. எனினும் மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களில் தவெக வெல்லாததால், தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை உருவாகியது. திமுக ஆதரவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி மட்டும் நாலு கால் பாய்ச்சலில் சென்று தவெகவுக்கு ஆதரவு ெகாடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரசின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை கிடைத்த போதும், ஆட்சி அமைக்க மெஜாரிட்டி காட்ட வேண்டும் என்று ஆளுநர் போட்ட தடை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையில், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியும், ஒரு மாநிலங்களவை பதவியும் தருவதாக டீல் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு அமைச்சர் பதவி என்றதும், அதை கைப்பற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது பகிரங்கமாக வெடித்த நிலையில் தவெகவை ஆதரித்தது தவறு என்று ஒரு சில எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்ல, அதிமுக, தவெக உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்ட நிலையில், தவெகவோ, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் வேலையில் இறங்கியது. இதை தடுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களில் இருவரை வளைத்து போடும் வேலையில் அதிமுக இறங்கியதாக கூறப்படுகிறது. இதற்காக 2 எம்எல்ஏக்களிடம் ரகசிய டீலிங் பேசப்பட்டதாகவும் வதந்திகள் பரவியது. இந்த தகவலை அறிந்த காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. குதிரை பேரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிக்குவதை தடுக்க காங்கிரஸ் தலைமை உடனடியாக அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடிவு செய்தது. சென்னையில் அவர்களை வைத்திருப்பது பாதுகாப்பானதாக இல்லை என்று கருதி, காங்கிரஸ் தலைமை அவர்களை உடனடியாக காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலங்கானாவுக்கு செல்ல உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விஸ்வநாதன், ராஜேஷ் குமார், தாரகை கத்பட், ஜமால் முகமது ஆகிய எம்எல்ஏக்கள் புறப்பட்டு சென்றனர். பிரவீன் என்ற காங்கிரஸ் எம்எல்ஏ இவர்களுடன் செல்லவில்லை. அவர் தனியாக செல்கிறாரா என்ற தகவல் வெளியாகவில்லை. அவர் ஏற்கனவே பெங்களூர் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. எம்எல்ஏக்களின் செல்போன்களை ஆப் செய்து வைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

 

Related Stories: