தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு: திமுக கூட்டணி தொடரும்

 

சென்னை: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெகவிடம் 107 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். இதனால், பெரும்பான்மைக்கு கூடுதலாக 11 இடங்கள் தேவைப்படும் நிலையில் 5 எம்எல்ஏக்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியை முறித்து கொண்டு, தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. அதை தொடர்ந்து, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக கடிதம் மூலமாகவும், நேரிலும் ஆதரவு கேட்டது. இந்நிலையில், தவெகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நேற்று ஆலோசனை மேற்கொண்டன. சென்னை சூளைமேடு அமீர் ஜான் தெருவில் உள்ள கூட்ட அரங்கில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு பிறகு, நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதேபோல், சென்னை தி.நகரில் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இப்போது இருக்கும் நிலைமையில் 10ம் தேதிக்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையவில்லை என்றால் ஆளுநர் ஆட்சி என்பதுதான் நடைமுறை சாத்தியம். ஏற்கனவே தனிப்பெரும் கட்சி என்கிற முறையில் முறையாக தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைப்பதற்கு மாநில ஆளுநர் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் தான் உங்களை ஆட்சி அமைக்க அழைப்பேன், என்று ஆளுநர் சொல்லி இருப்பது சட்ட விரோதமானது. ஆளுநர் ஆட்சி என்பது பாஜ கொள்ளைப்புற வழியாக ஆட்சி நடத்துவதாகத்தான் அமையும்.

பாஜவின் நோக்கத்தை முறியடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு அளிப்பது என்று தீர்மானித்திருக்கிறோம். அதே நேரத்தில் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம். வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்றுதான் 2 கட்சிகளும் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். வரும் காலங்களில் தமிழக உரிமைகளுக்கு, ஜனநாயகத்திற்கு, மதச்சார்பின்மைக்கு தவெக தலைவர் விஜய் உரத்த குரல் எழுப்ப வேண்டும். அதற்கு இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் உறுதுணையாக இருக்கும். திமுகவின் நலதிட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். தி முக தமிழ்நாட்டிற்கு செய்த நலத்திட்டங்கள் தொடர்ந்தால் தான் தமிழ்நாடு முன்னோக்கி செல்லும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Related Stories: