சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு கோரிய பாஜ செய்தி தொடர்பாளரை, கட்சியில் இருந்து நீக்கி நயினார் நாகேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழக பாஜ செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், கடந்த 2 நாட்களுக்கு முன், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘சட்டசபை தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எனவே விஜய் தலைமையில் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளின் எம்எல்ஏக்களும், தலைவர்களும் பெருந்தன்மையுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன்பின், தவெக ஆட்சியின் செயல்பாடுகளை பொறுத்து, ஒவ்வொரு கட்சியும் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப முடிெடுத்து நாகரிக அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி, தமிழக அரசியலில் ‘குதிரை பேரம்’ என்ற அவப்பெயருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தவெக எந்தவித அழுத்தமும் இன்றி சுதந்திரமாக ஆட்சி அமைக்கவும், அவர்கள் விரும்பினால் மட்டுமே கூட்டணி அமைக்கவும் அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும்,’ என்று தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார். விஜய்க்கு தேசிய ஜனநாயக கூட்டணி முழு ஆதரவு அளிக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
விஜய்க்கு பாஜ ஆதரவு அளிக்க வேண்டும் என்ற பிரசாந்தின் இந்த அறிக்கை பாஜவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கட்சியின் மேலிட அனுமதி இன்றி, தன்னிச்சையாக இத்தகைய கருத்தை வெளியிட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று பாஜ தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பாஜ செய்தி தொடர்பாளர் ஏ.என்.பிரசாரத், பாஜவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், ஏ.என்.பிரசாத், கடந்த மார்ச் மாதம், தவெக தலைவர் விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். இது கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரானது எனக் கருதப்பட்டதால், அவர் அப்போது தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் அந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, அவர் கட்சி பொறுப்பில் செயல்பட அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
