தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்: பாஜக கூட்டணியில் அதிமுக வெளியேறுகிறது?

 

 

அடுத்த நடவடிக்கை குறித்து நயினார் நாகேந்திரன் கட்சியினருடன் அவசர ஆலோசனை

சென்னை: தமிழக அரசியலில் அடுத்த திருப்பமாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற திட்டமிட்டுள்ளது. அதிமுகவின் இந்த திடீர் நிலைப்பாடு தொடர்பாக நயினார் நாகேந்திரன் கட்சியினருடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜக, பாமக(அன்புமணி), அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்பட்ட போதே வெற்றி வாய்ப்பு இல்லாத, செல்வாக்கு இல்லாத தொகுதியை அதிமுக ஒதுக்கியதாக பாஜக அப்போதே குற்றம் சாட்டியது. இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இருந்த போதிலும் அதிமுக ஒதுக்கிய தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. இதில் பாஜக வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. உதகமண்டலம் தொகுதியில் போட்டியிட்ட போஜராஜன் மட்டுமே வெற்றி பெற்றார். அதே நேரத்தில் போட்டியிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் அனைவரும் தோல்வியை சந்தித்தனர். அதாவது சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அவிநாசியில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், தஞ்சாவூர் தொகுதியில் முருகானந்தம், திருப்பத்தூரில் திருமாறன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், விளவங்கோட்டில் விஜயதாரணி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

அவர்கள் அனைவரும் படுதோல்வியை சந்தித்தனர். தலைவர்கள் தோல்வியை சந்தித்தது கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பாஜக சார்பில் நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்ற போஜராஜனும் பங்கேற்றார். கலந்தாய்வு கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

அப்போது வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளை அதிமுக ஒதுக்கியதே தோல்விக்கு காரணம் என்று பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாஜக போட்டியிட்ட இடங்களில் அதிமுக முழுமையான ஆதரவு தரவில்லை என்றும் குற்றச்சாட்டை பதிவு செய்தனர். அதே நேரத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெகவிற்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து தவெகவின் பலம் 112 ஆகியுள்ளது. மெஜாரிட்டிக்கு இன்னும் 6 இடங்கள் தவெகவிற்கு தேவைப்படுகிறது. இதையடுத்து விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக கோரியுள்ளது. மூன்று கட்சிகளிடம் தலா 2 இடங்கள் என 6 இடங்கள் உள்ளன.

இவர்கள் ஆதரவு அளித்தால் தவெக ஆட்சி அமைக்க முடியும். இதனால், இந்த 3 கட்சிகளும் யாருக்கு ஆதரவு அளிக்க போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3 கட்சிகளும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 3 கட்சிகளின் ஆதரவு இல்லையெனில் அடுத்த கட்டமாக என்ன நடைபெறும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். அதே நேரத்தில் சென்னையில் திமுக எம்எல்ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவசர முடிவுகளை எடுக்க அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் இருந்து இன்று சென்னைக்கு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்கும் வரை அவர்கள் சென்னையில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டு உள்ளது.

இடதுசாரிகளின் நிலைப்பாட்டை பொறுத்து என்டிஏ கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. என்டிஏ கூட்டணியில் அதிமுக நீடிப்பதால்தான் தற்போது வரை அக்கட்சியை விஜய் தரப்பு அணுகவில்லை. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சியுடன் விஜய் கூட்டணி வைத்தால், அது விஜய்யின் வாக்கு வங்கியை பாதிக்கும். இதனை புரிந்துக்கொண்ட அதிமுக தலைமை, பாஜக கூட்டணியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வர், முக்கிய அமைச்சர் பதவி போன்ற நிபந்தனையோடு விஜய்க்கு ஆதரவளிக்கலாம் என்று பேச்சுக்கள் அடிப்பட்டிருக்கின்றன.

அதிமுக ஆதரவு அளித்தால் தவெகவிற்கு ஆதரவு என்பது 159 ஆகி விடும். இதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் விஜய் முதல்வராக தொடர வாய்ப்புள்ளது. இது குறித்தும் பாஜக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறும் பட்சத்தில் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் ெவளியாகியுள்ளது.

Related Stories: