ஸ்பெயின் நோக்கி சென்ற கப்பல் மூலம் பரவிய ‘ஹான்டா’ வைரஸ் தொற்றால் 3 பேர் பலி: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

 

ஜெனீவா: சுற்றுலா கப்பலில் பரவிய ஹான்டாவைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு விரிவான விளக்கம் அளித்துள்ளது. அர்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயின் நோக்கி ‘எம்.வி. ஹோண்டியஸ்’ என்ற சுற்றுலா கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் சென்று கொண்டிருந்தது. கடந்த 2ம் தேதி அந்த கப்பலில் இருந்த பயணிகளுக்கு கடுமையான சுவாச கோளாறு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களுக்கு ‘ஹான்டா வைரஸ்’ பாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இப்பாதிப்பால் கப்பலில் பயணம் செய்த 3 பயணிகள் பலியாகினர். தற்போது வரை 8 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், 5 பேருக்கு பாதிப்பு இருப்பது ஆய்வக சோதனையில் உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக கப்பல் கேப் வெர்டே கடற்கரை அருகே நங்கூரமிடப்பட்டது. இந்நிலையில் நேற்று ஸ்பெயின் நாட்டின் டெனெரிப் பகுதிக்கு கப்பலை கொண்டு செல்ல அந்நாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து இன்று முதல், பாதிக்கப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட்ட பாதை வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அவர்களது சொந்த நாடுகளுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்த வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இயக்குனர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், ‘ஹான்டாவைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. இது கொரோனா வைரஸ் போல் காற்றால் பரவாது. பாதிக்கப்பட்ட எலிகளின் உமிழ்நீர், சிறுநீர் அல்லது கழிவுகளில் இருந்து வரும் தூசியை சுவாசிப்பதன் மூலமே மனிதர்களுக்கு பரவுகிறது. உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார்.

Related Stories: