பெங்களூரு: கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் (எ) ராமு (23). பெங்களூருவில் மாதநாயக்கனஹள்ளி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்தார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, இருவரையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு கார்த்திக் சென்றுவிட்டார். அவரை பிடித்த மாதநாயக்கனஹள்ளி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, தன் மீது போலீசார் ‘போக்சோ’ வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என பயந்து, கையில் இருந்த லாக்கர் சாவியை (சிறிய சாவி) திடீரென வாயில் போட்டு விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனே கார்த்திக்கை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சாவியை மீட்க வாழைப்பழங்களை சாப்பிட கொடுக்கும்படியும், இவ்வாறு செய்தால், இயற்கை உபாதை மூலம் வெளியே வந்துவிடும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி போலீசாரும், கார்த்திக்கை வலுக்கட்டாயப்படுத்தி வாழைப்பழங்களை சாப்பிட வைத்துள்ளனர். மொத்தம் 10 கிலோ வாழைப்பழங்களை சாப்பிட வைத்துள்ளனர். அதன்பிறகு இயற்கை உபாதை மூலம் சாவி வெளியே வந்தது. இதனால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
