பீகாரில் அதிர்ச்சி சம்பவம் – மதிய உணவில் கிடந்த பாம்பு குட்டி..250-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு

லக்னோ: பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட ஏராளமான குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பீகாரின் சஹர்சா பகுதியில் மஹிஷி வட்டாரத்திற்குட்பட்ட பாலுஹாவில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட மதிய உணவில் ஒரு சிறிய பாம்பு கண்டெடுக்கப்பட்டது. நேற்று மதியம் பாம்பு கிடந்த உணவை உட்கொண்ட 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் வயிற்று வலி, வாந்தி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளால் அவதோ அடைந்தனர். இது குறிப்பிட்ட பள்ளி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் உடனடியாக மஹிஷி சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான மாணவர்கள் சுகாதார மையத்திற்கு அழைத்து வரப்பட்டதால், அங்கு மக்கள் கூட்டம் திரண்டது.

பள்ளியில் கொடுக்கப்பட்ட அரிசி மற்றும் பருப்பு கலந்த உணவை சாப்பிட்டதும் சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் தலைச்சுற்றல் உள்ளிட்ட பல அறிகுறிகள் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் கூறி இருக்கிறார்கள். மேலும் அந்த உணவைச் சாப்பிட்ட பிறகு பல குழந்தைகளின் உடல்நலம் மோசமடையத் தொடங்கியதாக தெரிகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பெற்றோர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கிராம மக்களும் பெற்றோர்களும் பள்ளியில் திரண்டு, உணவின் தரம் குன்றியிருந்ததைக் குறித்தும், இதில் சம்பந்தப்பட்ட அலட்சியத்தைக் குறித்தும் முழக்கமிட்டு, தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர்.பள்ளியில் பருப்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் ஒரு சிறிய பாம்பு குட்டி கிடந்ததாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே பள்ளி நிர்வாகம் சார்பாக உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் தீபேஷ் குமார் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்கள் சஹர்சா சதர் மருத்துவமனை மற்றும் மகிஷி பொது சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது பெரும்பாலான மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: