டெல்லி: நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் கழிப்பறைகள் மற்றும் கை கழுவும் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் தற்போது வரை இல்லை என்ற அவலத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான அறிக்கையில் நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தண்ணீர் வசதி, கழிப்பறைகள், மின்சாரம், ஆய்வகங்கள் அல்லது போதுமான ஆசிரியர்கள் இன்றியே தொடர்ந்து இயங்கி வருகின்றன. பள்ளிகளில் ஒட்டுமொத்த கழிப்பறை வசதிகள் கணிசமாக மேம்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் உள்ள 98,592 பள்ளிகளில் இன்றும் பயன்பாட்டிற்குரிய மாணவிகளுக்கான கழிப்பறைகள் இல்லை என்றும், 61,540 பள்ளிகளில் எவ்விதமான பயன்பாட்டிற்குரிய கழிப்பறை வசதிகளும் இல்லை என்றும் அது சுட்டிக்காட்டுகிறது.
அதே போல் கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிகளில் மின்சார வசதி 55 சதவீதத்திலிருந்து 91.9 சதவீதமாக மேம்பட்டிருந்தாலும், ஏறத்தாழ 1.19 லட்சம் பள்ளிகளில் இன்றும் செயல்படும் நிலையில் உள்ள மின் இணைப்புகள் இல்லை. தவிர 14,505 பள்ளிகளில் இன்றும் போதுமான குடிநீர் வசதி இல்லை என்றும், 59,829 பள்ளிகளில் கை கழுவும் வசதிகள் இல்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கூடுதலாக, நாட்டின் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 51.7 சதவீதம் மட்டுமே அறிவியல் ஆய்வகங்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரம் இந்த அறிக்கையில் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெறும் 4.6 சதவீதத்தை மட்டுமே கல்விக்காகச் செலவிடுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இது சுமார் 5.9 சதவீதமாகவும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் ஏறத்தாழ 5.4 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
